×

பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐநா அமைப்பு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ,  அது நடந்து விட்டது. தமிழினத்தின் எதிரியான கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10 சதவீதம் வாக்குகள் கூட கிடைக்கவில்லை. அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60  முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90 சதவீதம் வாக்குகளும், மற்ற பகுதிகளில்  40 விழுக்காட்டுக்கும்  குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.  இது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன.

அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு  காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப்  பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும். அதிபர் தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை  பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம்  அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : United Nations ,Tamil Eelam , referendum,Tamil Eelam,e forward, Ramadas
× RELATED உலகின் மகிழ்ச்சியான நாடுகளின்...