சஜித் பிரேமதாசாவை விட 13 லட்சம் வாக்குகள் பெற்று இலங்கை அதிபராக கோத்தபய தேர்வு

* ரணில் பதவி விலக திட்டம்

* விரைவில் ஆட்சி மாற்றம்

* பிரதமராகிறார் ராஜபக்சே

* தமிழர்கள் அச்சம்

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் 13 லட்சம் வாக்குகளை அதிகம் பெற்று, கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, நாட்டின் 7வது அதிபராக இவர் பதவியேற்க உள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால்,  தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய வெற்றியால், இலங்கை தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  இலங்கையில் தற்போது அதிபராக உள்ள மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு  கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இருப்பினும், பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் (70), ஆளும் ஐக்கிய தேசிய  கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவியது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. சில இடங்களில் தமிழர்கள், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுக்க, மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடும், தாக்குதலும் நடத்தினர். மற்றப்படி தேர்தல் அமைதியாக முடிந்தது.  வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில், கோத்தபயாவும், சஜித்தும் மாறி, மாறி முன்னிலை பெற்று வந்தனர். பிறகு, கோத்தபயா தொடர்ந்து முன்னிலை பெறத் தொடங்கினார்.

நேற்று பிற்பகலில் வெற்றி பெறுவதற்கான 50 சதவீத வாக்குகளை கோத்தபய கடந்தார். தன்னை விட 2 லட்சம் வாக்குகளை கோத்தபயா முன்னிலை பெற்ற போதே, சஜித் பிரேமதாசா தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். மேலும்,  தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடிந்த நிலையில், கோத்தபய வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகள் பெற்றார். சஜித் பிரேமதாசாவை  விட இவர் 13 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். கோத்தபய 52.25 சதவீத வாக்குகளையும், சஜித் 41.99 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இதர வேட்பாளர்கள் 5.7 சதவீத வாக்குகளை பெற்றனர். இதையடுத்து, இலங்கையின் 7வது அதிபராக  கோத்தபய பதவியேற்க உள்ளார்.இலங்கையில் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது மகிந்தா ராஜபக்சே அதிபராகவும், கோத்தபய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். இவர்கள் இருவருமே இலங்கை தமிழர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டதாக  சர்வதேச அளவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபயா அதிபராகி இருப்பது, இலங்கை தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேபோல், தமிழர்களுக்கு ஆதரவான இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோத்தபய பதவியேற்கும் முன்பாக, இவர் பதவி விலகுவார் என்றும், அப்பதவியில் தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை  கோத்தபய நியமிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கை அரசியலில் ராஜபக்சே சகோதரர்களின் ஆதிக்கம் மீண்டும் கொடிகட்டி பறக்கும் என்று கருதப்படுகிறது. இருவருமே சீனாவுக்கு ஆதரவானர்கள் என்பதால், இந்தியாவுக்கும்  பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது, விடுதலை புலிகளுக்கு எதிரான போரை கோத்தபயதான் முன்னின்று நடத்தினார். இதன் மூலம், 30 ஆண்டு கால உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார். அதே நேரத்தில் போர்  குற்றங்களில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. போரின்போது ஐநா.வின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டது, ஊடகங்களை முடக்கியது, பெண்களுக்கு எதிராக செயல்பட்டது என இவர் மீது அடுக்கடுக்கான பல்வேறு  குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர், இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமையை பெற்று வலம் வந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சில நாட்களுக்கு முன், அமெரிக்க குடியுரிமையை துறந்தார். கோத்தபய பேசுவதை காட்டிலும்,  அதிகமாக செயலில் ஈடுபடுவார் என்ற பெயர் உள்ளது.

சென்னையில் முதுகலை பட்டம்

அசாமில் கடந்த 1980ம் ஆண்டு நடந்த ஊடுருவலை தடுப்பது மற்றும் போர் பாதுகாப்பு குறித்த பயிற்சியில் கோத்தபய ராஜபக்சே கலந்து கொண்டார். மேலும், 1983ம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான பிரிவில்  முதுகலை பட்டம் பெற்றார். கடந்த 2012, 2013ம் ஆ்ண்டுகளில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இணைந்து பயணிப்போம்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபய, தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘இலங்கையின் புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கும் நாம், பயணத்தின் பகுதியாக இலங்கை மக்கள் அனைவரும்  இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஒழுக்கத்துடனும்,  கண்ணியத்துடனும் இருந்தது போலவே வெற்றியையும் நாம் அமைதியுடன் கொண்டாடுவோம்,’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கோத்தபயவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்கள்.  இரு நாட்டு மக்களுக்கும் இடையே நெருக்கமான, சகோதரத்துவ உறவுகளை வலுப்படுத்தவும், பிராந்தியத்தின் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்பிற்காக உங்களுடன் (கோத்தபய) நெருக்கமாக இணைந்து பணியாற்றும் தருணத்தையும் எதிர்நோக்கி  உள்ளேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>