×

நெல்லையில் நிரம்பும் நிலையில் 7 அணைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் 11 அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 7 அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 அணைகளில் 7 அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் சிறிய அணையான குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை ஏற்கனவே எட்டியதால் அணைக்கு வரும் 21 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.72 அடி கொள்ளளவு உடைய கருப்பாநதி அணையில் நீர்  இருப்பு 66.96 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 25 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இதுபோல் அடவிநயினார் கோயில் அணை அதன் முழு கொள்ளளவான 132 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 20 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. 85 அடி கொள்ளளவு உடைய கடனா அணையில் தற்போது 83.90 அடியை எட்டியுள்ளது.  இன்னும் ஒரு அடியே தண்ணீரே அணை நிரம்ப தேவைப்படுவதால் இன்றோ, நாளையோ இந்த அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது.156 அடி கொள்ளளவு உள்ள சேர்வலாறு அணையில் இன்று 140 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இங்கு கூடுதல் தண்ணீர் சேகரிக்கப்படவில்லை. 84 கொள்ளவு கொண்ட ராமநதி அணையில் 76.75 அடி தண்ணீர் எட்டியுள்ளது. இந்த அணைக்கு தொடர்ந்து 104.86 கனஅடி நீர்வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய அணையான 49.20 அடி கொள்ளளவு உடைய வடக்கு பச்சையாறு அணையில் மட்டும் 7 அடி அளவிலேயே தண்ணீர் உள்ளது. இதுபோல் 23.60 அடி கொள்ளளவு .உடைய நம்பியாறு 15.25 அடி அளவில் தண்ணீர் உள்ளது.மாவட்டத்தில் மற்றொரு முக்கிய பெரிய அணையான 118 அடி கொள்ளளவு உடைய மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 67.20 அடியாக உள்ளது.நெல்லை மாவட்டத்தில் பல அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால் நெல்லை தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Paddy , Paddy, dams and farmers are happy
× RELATED படுகை அணைகள் நிரம்பி வழிகின்றன வெள்ளத்தில் தத்தளிக்கும் புதுவை