×

டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார் சரத் பவார்: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் நாளை சோனியா காந்தியை சந்திக்கிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இக்கட்சிகளின் முப்பது ஆண்டுகால கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது.

சிவசேனா தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக அக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசும் காங்கிரசும் ஒப்புக் கொண்டுள்ளன. புதிய கூட்டணி அரசமைக்க இம்மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் வரைவு திட்டத்தையும் தயாரித்து விட்டன. இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு மூன்று கட்சித் தலைமைகளும் ஒப்புதல் அளித்த பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு சந்திப்பதாக இருந்தது.

இதற்காக ஆளுநரிடம் நேரமும் கேட்கப்பட்டிருந்தது. விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ஆளுநரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைக்க அவரை சந்திக்க இருப்பதாக மூன்று கட்சிகளின் தரப்பிலும் கூறப்பட்டது. ஆனால், ஆளுநரை சந்திக்கும்போது இக்கட்சிகள் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆளுநருடனான சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்று மாலை திடீரென அறிவித்தார்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளார். அப்போது மகாராஷ்ட்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Sharad Pawar ,Delhi ,Sonia Gandhi , Delhi, Sonia Gandhi, Sharad Pawar
× RELATED சரத் பவார் படத்தை அஜித் பவார் அணி பயன்படுத்த தடை..!!