×

முழு கொள்ளளவை எட்டியது பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

ஈரோடு: முழு கொள்ளளவை எட்டிய பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 17,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான  நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் பவானி ஆற்றில் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டு பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக  நேற்று மாலை முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் பாதுகாப்பு கருதி மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டது. காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 7,624 கனஅடியாக நீர்வரத்து இருந்தது. 10 மணியளவில் 10, 300 கனஅடியாக அதிகரித்தது. பிற்பகல் நிலவரப்படி நீரின் அளவு விநாடிக்கு 17,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் பவானி ஆற்றில் விநாடிக்கு 14 ஆயிரத்து 900 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாயிரத்து 100 கனஅடி நீரும் திறக்கப்பட்டது.

அணைக்கு வரும் மொத்த உபரிநீரும் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரையிலான ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் மேல்பகுதியில் முகாமிட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags : Bawanisagar Dam ,residents , Bhawanisagar Dam, flood hazard warning
× RELATED ஆந்திராவில் ஊருக்குள் புகுந்த 70...