×

திருவண்ணாமலை தீபவிழா அனுமதி அட்டையில் ‘பார்கோடு’: போலிகளை தடுக்க சிறப்பு ஏற்பாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, 6ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 7ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில், பரணி தீப தரிசனத்துக்கு 4 ஆயிரம் அனுமதி அட்டைகள் வழங்கவும், மகா தீப தரிசனத்துக்கு 6 ஆயிரம் அனுமதி அட்டைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ500 கட்டண தரிசன டிக்கெட் ஆயிரமும், ரூ600 கட்டண தரிசன டிக்கெட் 100ம் ஆன்லைனில் விற்பனை செய்ய உள்ளனர்.

அதோடு, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், அதிகாலை பரணி தீபத்திற்கு சுமார் 2 ஆயிரம் பக்தர்களையும், மகா தீபத்திற்கு 2,500 ஆயிரம் பக்தர்களையும் கோயிலுக்குள் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள், 3ம் பிரகாரத்தில் உள்ள திருமாளிகை பத்தி மண்டபம், மடப்பள்ளி மண்டபம் ஆகியவற்றின் மீது அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி அட்டை வைத்திருப்போர் 3ம் பிரகாரத்தில் கொடிமரம் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், 4 ஆயிரம் அனுமதி அட்டை வழங்கினாலும், போலி அனுமதி அட்டை மூலம் மேலும் 4 ஆயிரம் பேர் கோயிலுக்கு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ஏடிஎஸ்பி வனிதா அதிர்ச்சி தகவல் வெளியிட்டார். மேலும், கட்டண தரிசன டிக்கெட்டில் கலர் ஜெராக்ஸ் மற்றும் போலியாக அச்சிட்ட டிக்கெட் ஆகியவை புழக்கத்தில் இருந்ததும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. எனவே, இந்த ஆண்டு கட்டண தரிசன டிக்கெட் மற்றும் அனுமதி அட்டை ஆகியவற்றில் ‘பார்கோடு’ அடையாளத்தை பிரிண்ட் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு அனுமதி அட்டையையும், முறையான மின்னணு கருவி மூலம் ஸ்கேன் செய்த பிறகே பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிப்பது என திட்டமிட்டுள்ளனர். எனவே, அடையாள அட்டைகளை பரிசோதிக்க மூன்று இடங்களில் ஸ்கேன் கருவி சோதனை நடத்தப்படும். ஆன்லைனில் கட்டண தரிசன டிக்கெட் பெற, ஆதார் எண் கட்டாயம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதேபோல், அனுமதி அட்டை வழங்கும் போது, அந்த அடையாள அட்டை யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய புதிய நடைமுறையை பின்பற்றவும் ஆலோசனை நடந்து வருகிறது.

Tags : Thiruvannamalai , Thiruvannamalai Fire Festival, Permit Card
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...