×

நச்சுக்காற்றை வெளியேற்றும் குப்பைக்கிடங்கு: அவதியுறும் மக்கள், மவுனம் சாதிக்கும் மாநகராட்சி

கோவை: கோவையில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு நச்சுக்காற்று வெளியேற்றுகிறது. இதனால், மக்கள் அவதியுறுகின்றனர். நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மவுனம் சாதிக்கிறது.  கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் இருந்து அன்றாடம் ேசகரிக்கப்படும் குப்பைகள் இங்குதான் சேமிக்கப்படுகின்றன. தினமும் சுமார் 850 டன் முதல் 1000 டன் வரை இங்கு குப்பை குவிக்கப்படுகிறது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றி சுமார் 4 கி.மீ. சுற்றளவில், கோணவாய்க்கால்பாளையம், அன்புநகர், எல்.ஜி. நகர், ஸ்ரீராம் நகர், கஞ்சிகோணாம்பாளையம், சாமனாபுரம், சித்தன்னாபுரம், அற்புதம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு, மாநகராட்சியின் 99 மற்றும் 100 வது வார்டு மக்கள் குடியிருக்கின்றனர். தவிர, வெள்ளலூர் பேரூராட்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களும் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் காரணமாக, சுற்று வட்டார பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிச்கொண்டே இருக்கிறது. கொசு தொல்லை, ஈக்கள் தொல்லையும் அதிகளவில் உள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் எப்போதுமே ஈக்கள் தொல்லை இருப்பதாகவும், நஞ்சுக்காற்றை சுவாசிப்பதால் மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இப்பிரச்னை என்று தீரும்?, குப்பைக்கிடங்கு இடமாற்றம் எப்போது? என இங்குள்ள மக்கள் தவியாய் தவித்தபடி, காத்திருக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுக்கும் கோவை மாநகரம், குப்பைக்கிடங்கின்றி, சுகாதாரமான மாநகரமாக மாற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் டேனியல் கூறியதாவது: வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகளால், சுமார் 25 லட்சம் டன் அளவுள்ள குப்பை சேர்ந்துள்ளது. இதனால், துர்நாற்றம் அதிகரிக்கிறது. குறிப்பாக, மதிய வேளையில் அதிகரித்து காணப்படுகிறது. குப்பைகளை காய வைப்பதாக கூறி மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பரப்பி விடுகின்றனர். இதன் காரணமாகவே மதிய வேளையில் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது.  24 மணி நேரமும் மூக்கை பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. குப்பைக்கழிவு காரணமாக, ஈக்கள் வீடுகளை சூழ்ந்து விடுகிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், சரும பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் அன்றாடம் சிரமப்படுகிறோம்.   

இங்கு, பல ஆண்டுகளாக குப்பை குவிக்கப்படுவதால் நிலத்தடி நீரும் மாசடைந்து விட்டது. போர்வெல் தண்ணீரை யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி, பல ஆண்டுகளாக நாங்களும், பல கட்ட போராட்டம் நடத்தி விட்டோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்க மறுக்கிறார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் நகரை அழகுப்படுத்தி, தூய்மைப்படுத்துகிறார்கள். ஆனால், வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றிலும் சுகாதாரமற்ற நிலையில் வசிக்கும் மக்களை கண்டுகொள்வதில்லை. மக்களுக்கு, சுகாதார சீர்கேட்டை கோவை மாநகராட்சி நிர்வாகமே உருவாக்குகிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது.
இவ்வாறு டேனியல் கூறினார். வெள்ளலூர் பகுதி மக்கள் கூறியதாவது: குப்பை பிரச்னையால், எங்களது வீடுகளுக்கு உறவினார்கள் யாரும் வருவதில்லை. வீட்டில் விசேஷம் வைத்தால்கூட வருவதில்லை. குப்பைக்கிடங்கை பராமரிக்க விதிமுறை எதையும் மாநகராட்சி நிர்வாகம் கடைப்பிடிப்பது இல்லை. குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டால் ஒரு வாரம் புகைமூட்டம் சூழ்கிறது.  இதனால், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. வீட்டை பூட்டிவிட்டு, வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாதம் இருமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. சரும பிரச்னை மற்றும் கை, கால் போன்றவற்றில் புண் ஏற்படுகிறது. எங்களுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புக்கும் மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பு. வெயிலின் தாக்கத்தால் இந்த குப்பைக்கிடங்கில் இருந்து உருவாகும் மீத்தேன் வாயு காரணமாக அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. சிறிய அளவில் ஏற்படும் தீயை உடனடியாக அணைக்காவிட்டால், அது வேகமாக பரவி, பெரிய தீ விபத்தாக மாறிவிடுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தீ பற்றி எரிகிறது. புகை மூட்டத்தால், சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் மூச்சுச்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்க, குப்பைக்கிடங்கில் நிரந்தரமாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டிற்கு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் கொண்டுவரப்படுகிறது. தண்ணீர் இருந்தாலும் தீயை வேகமாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு தினமும் 850 டன் குப்பை வருகிறது. இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை அனுப்புவதால் மீத்தேன் எரிவாயு உருவாகி, வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற சிறு மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில், 59 மையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. கவுண்டம்பாளையம், வி.எச்.ரோடு உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் பணிகள் சோதனை முறையில் துவங்கப்பட்டு தினமும் சுமார் இரண்டு டன் குப்பைகள் வரை உரமாக்கப்படுகிறது. இதற்காக, வீடு வீடாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க 102 இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இனி வரும் காலங்களில் வெள்ளலூர் குப்பை கிடங்கில், குப்பை தேக்கும் அளவு குறைக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறினார். கோவை மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளரும், தூய்மை பாரத திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமால் கூறுகையில், ‘’இக்குப்பைக்கிடங்கு பிரச்னையை தீர்க்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் கோவை மாநகராட்சி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அறிவியல் பூர்வமாக குப்பைகளை மக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். குப்பைகளின் தன்மை குறித்தும், இந்த குப்பைகளை எவ்வாறு மக்க வைக்கலாம்? என்பது குறித்தும் ஒரு மாதம் ஆய்வு நடத்த உள்ளோம்’’ என்றார்.

Tags : Suffering People and Silent Corporation ,Silent Corporation , Poison gas, litter, corporation
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்