×

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களின் ஆளுநருடனான சந்திப்பு திடீர் ரத்து

* சோனியா-சரத் பவார் இன்று நடத்தும் ஆலோசனைக்கு பின் அடுத்தகட்ட முடிவு

மும்பை: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் மகாராஷ்டிரா ஆளுநருடனான நேற்றைய சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் பிறகு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவது பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இக்கட்சிகளின் முப்பது ஆண்டுகால கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டது.

சிவசேனா தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக அக்கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரசும் காங்கிரசும் ஒப்புக் கொண்டுள்ளன. புதிய கூட்டணி அரசமைக்க இம்மூன்று கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் வரைவு திட்டத்தையும் தயாரித்து விட்டன. இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு மூன்று கட்சித் தலைமைகளும் ஒப்புதல் அளித்த பிறகு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு சந்திப்பதாக இருந்தது. இதற்காக ஆளுநரிடம் நேரமும் கேட்கப்பட்டிருந்தது. விவசாயிகள் பிரச்னை தொடர்பாக ஆளுநரை சந்தித்து சில கோரிக்கைகளை முன்வைக்க அவரை சந்திக்க இருப்பதாக மூன்று கட்சிகளின் தரப்பிலும் கூறப்பட்டது. ஆனால், ஆளுநரை சந்திக்கும்போது இக்கட்சிகள் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆளுநருடனான சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்று மாலை திடீரென அறிவித்தார்.

அவர் கூறுகையில், ‘‘மூன்று கட்சி பிரதிநிதிகளும் இன்று(நேற்று) மாலை ஆளுநரை சந்திப்பதாக இருந்தது. ஆனால், மூன்று கட்சிகளின் பல முக்கியத் தலைவர்களும், எம்.எல்.ஏ.க்களும் பருவம் தவறிய மழையால் விவசாய பயிர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதிலும், தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரமாக உள்ளனர். இதன் காரணமாகவே ஆளுநருடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநரை எப்போது சந்திப்போம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்’’ என்றார். இதற்கிடையே, டெல்லியில் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்து பேசுகிறார். இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘இன்று மாலை டெல்லியில் சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது குறைந்தபட்ச செயல் திட்டம், மூன்று கட்சிகளுக்குமான அமைச்சர் பதவி ஒதுக்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்’’ என்றார்.

சிவசேனா தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மனநிலையில்தான் காங்கிரஸ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியில் காங்கிரசும் இடம்பெற்றால்தான் அந்த அரசு நிலைத்திருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதுபற்றியும் சோனியாவுடன் சரத் பவார் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதனால், சோனியா-சரத் பவாரின் சந்திப்புக்கு பிறகுதான் இந்த கூட்டணி கட்சிகள் எப்போது உரிமை கோரும் என்பது தெரியும்.

சிவசேனா பங்கேற்காது

டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் சிவசேனா பங்கேற்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இன்று சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் நினைவு நாளும் ஆகும்.

யார் முதல்வர்?

புதிதாக அமையும் கூட்டணி அரசின் முதல்வராக யார் பொறுப்பேற்பார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. சிவசேனாவும் சரி, அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயும் சரி கட்சியின் இளைஞரணியான யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரேயை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்க்க ஆசைப்படுகின்றனர். ஆனால், அரசியல் அனுபவமோ அல்லது நிர்வாக அனுபவமோ இல்லாத மிக இளையவரான ஆதித்ய தாக்கரேயை முதல்வராக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் விரும்பவில்லை என்றும் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று அவ்விரு கட்சிகளும் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags : Governor ,Congress ,Nationalist ,Shiv Sena ,leaders ,cancellation , Sudden cancellation of Congress, Nationalist Congress and Shiv Sena leaders
× RELATED தேர்தல் நடைமுறையில் தலையிடுவதாக...