×

விற்பனை பாதியாக குறைந்தது: சிறுமுகை பட்டுச்சேலை நெசவாளர்கள் வேதனை

கோவை : கோவை மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது காட்டன் சேலைகள்தான். மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், நெகமம் ,பல்லடம், வதம்பச்சேரி, புளியம்பட்டி, தொட்டபாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் 10  ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் காட்டன் சேலை நெய்து வந்தனர். கோவை மாவட்டத்தில் விளைந்த பருத்தி சுத்தம் செய்யப்பட்டு நூலாக மாற்றும் மில்கள் இருந்தன. கைத்தறி நெசவாளர்கள் மில்களில் இருந்து நூல் வாங்கி சுத்தம் செய்து கஞ்சி போட்டு சாயம் ஏற்றி கைத்தறியில் நெசவு நெய்து நேர்த்தியான  அழகிய காட்டன் சேலைகளை தயார் செய்து வந்தனர். இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்த காட்டன் சேலைகள் பெண்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வந்தது.

கோவையில் பல பாரம்பரிய தொழில்கள் நலிவடைந்து வந்ததுபோலவே கைத்தறி  தொழிலும் மெல்ல மெல்ல நலிவடைந்தது. போதிய வருமானம் இல்லாததால் நெசவுத்தொழிலை பல பேர் விட்டு சென்றதும் நடந்தது. இளம் தலைமுறையினர் இந்த தொழிலை கற்றுக்கொண்டு நெசவுத் தொழிலில் ஈடுபடாமல் போனதாலும்  கைத்தறி தொழில்  மோசமான நிலைக்கு சென்றது. இதனால் நெசவாளர்கள் அன்றாட குடும்ப செலவுக்குகூட பணம் இல்லாமல் திண்டாடி வந்தனர். இந்த நிலையில் 1983ம் ஆண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோரா பட்டு நூல் கைத்தறி நெசவாளர் வாழ்க்கையில் மாற்றத்தை  ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் கோரா பட்டு நூலைப் பயன்படுத்தி சேலைகள் நெய்வதற்கு சிறிது சிரமப்பட்டாலும் பின்னாளில் கோரா சேலை, கோராநூல் மற்றும் காட்டன் நூலை இணைத்து செய்யப்படும் கோரா காட்டன், கோரா நூல் மற்றும் பட்டு நூல்  இணைத்து நெய்யப்படும் கோராப்பட்டு சேலை என்ற பெயர்களில் அழகிய வண்ண வண்ண கண்கவர் சேலைகள் நெய்து பிரபலம் அடைந்தனர். குறிப்பாக சிறுமுகை, பவானிசாகர், புளியம்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்கள் கோரா நூல் பயன்படுத்தி சேலை நெய்ய தொடங்கினர். இதனால் நலிவடைந்த கைத்தறி நெசவுத் தொழில் மீண்டும் மெல்ல உயிர் பெற்றது.   

தொழில்நுட்ப வளர்ச்சியால் விசைத்தறி தொழில் பிரபலமடைந்ததால் கைத்தறி தொழிலுக்கு மீண்டும் சிக்கல் எழுந்தது. எனவே கைத்தறி நெசவாளர்களும் தங்கள் தொழிலை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள வசதியாக புதிய தொழில்நுட்பத்தை  கைத்தறியில் அறிமுகம் செய்யக்கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களுக்கு தனியார் நிறுவனங்கள் உதவி செய்தன. அந்த முயற்சியில் 1999ம் ஆண்டு மென்பட்டு நூல் பயன்படுத்தி எடை குறைவான பட்டு சேலைகளை அறிமுகப்படுத்தினர். இதில் உடனடியாக வெற்றி பெற்றவர்கள் சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள்தான். இவர்கள் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், தாவணிகரை, கனகபுரம், உள்ளிட்ட ஊர்களில் இருந்து மென்பட்டு நூல்களை கொண்டுவந்து கைத்தறியில் சேலைகளை நெய்தனர். அந்த  சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சைனாவிலிருந்து தரமான பளபளப்பு தன்மை கொண்ட நெய்வதற்கு இலகுவான மென்பட்டு நூல்கள் கொண்டு வரப்பட்டதன் மூலம் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்த முடிந்தது. எனவே கணினி மூலம் டிசைன்களை உருவாக்கி அந்த  டிசைன்களை கைத்தறி சேலைகளில் தத்துரூபமாக வடிவமைத்தனர்.  அவற்றில் சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கிய மயில்தோகை டிசைன் சேலை மற்றும் 1330 திருக்குறளை எழுத்து வடிவில் சேலையில் நெய்தது, திருவள்ளுவர் உருவத்தை சேலையில் தத்ரூபமாக வடிவமைத்தது, பல்வேறு  நுட்பமான சிலைகளை சேலைகளில் வடிவமைத்தது ஆகியவற்றை சொல்லலாம்.

இதற்காக தேசிய விருதையும் சிறுமுகை கைத்தறி நெசவாளர்கள் பெற்றனர். இதனால் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிறுமுகை மென்பட்டு சேலைகள் பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. விற்பனையும் அதிகமானதால்  நெசவாளர்கள் மீண்டும் தங்களுடைய பாரம்பரிய தொழிலை தக்கவைத்துக் கொண்டனர். தற்போது சிறுமுகை, சாமிசெட்டிபாளையம், புளியம்பட்டி, பவானிசாகர் அருகே உள்ள தொட்டபாளையம் உள்ளிட்ட ஊர்களில் முகூர்த்த பட்டு சேலைகளும், மென்பட்டு சேலைகளும் கைத்தறிகளில் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது. மென்பட்டு சேலையை கணவன்-மனைவி இணைந்து ஒரு நாளைக்கு ஒரு சேலையை நெய்துவிடமுடியும்.

இதற்காக ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை கூலி கிடைக்கும். சுப முகூர்த்த பட்டு சேலை நெய்வதற்கு 4 முதல் 5 நாட்கள்  ஆகும். இதற்கான கூலி என்பது 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கிடைக்கும். சிறுமுகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வந்தாலும் பெரும்பாலான நெசவாளர்கள் தனியார் மூலமே சேலைகள் நெய்ய ஆர்டர்கள் பெற்று செய்து கொடுத்து வருமானம் ஈட்டுகின்றனர். சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை  காலங்களில் மென்பட்டு சேலைகள் விற்பனை அதிகமாக இருக்கும். இதற்காக சிறுமுகை சுற்று வட்டார பகுதிகளில் நெசவாளர்கள் சிறு சிறு கடைகள் வைத்து சேலைகளை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால்  இந்த ஆண்டு விற்பனை என்று பார்க்கும்போது பாதி அளவு குறைந்துள்ளதாக நெசவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் அக்டோபர், நவம்பர் மாதம் வரை ரூ. 15 கோடிக்கு விற்பனை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 7  கோடியைகூட விற்பனை எட்டவில்லை என்கிறார்கள் அவர்கள். மேலும் பண்டிகை கால விற்பனைக்காக தயாரித்து வைத்திருந்த பட்டுச் சேலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதுதவிர முன்புபோல ஆர்டர்களும் வராததால் சிறுமுகை  நெசவாளர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததின் காரணமாகத்தான் விற்பனை குறைந்துள்ளதாக நெசவாளர்கள் கூறுகின்றனர். பெரிய பெரிய கடைகளிலும் மக்கள் மென்பட்டு சேலைகளை வாங்குவது குறைந்தது. இதனால் அந்த கடைக்காரர்கள்  எங்களுக்கு மென்பட்டு நெய்ய கொடுக்கும் ஆர்டர்களும் குறைந்து போனது என்கிறார்கள் நெசவாளர்கள்.

எனவே தமிழக அரசு நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. தொழிலை முன்னேற்றப்படுத்த கைத்தறித்துறை அமைச்சகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் அரசு  வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் கடைகோடி நெசவாளர்கள் வரை சென்று சேர்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பாரம்பரியமிக்க தமிழர்களின் கைத்தறி தொழிலை மீட்டெடுத்து உலக அளவில்  பிரபலம் அடையச்செய்ய முடியுமென்று நெசவாளர்கள் கூறுகின்றனர்.

மென்பட்டு சேலை தயாரிப்பில் ஆர்வம்:  கைத்தறி நெசவில் ஊடை நூல்,பாவு நூல் என்ற 2 வகையாக பட்டு நூல்கள் பயன்படுத்துவார்கள்.  இதில் 2 பாவு நூல் போட்டு, 3 ஊடை நூல்களை தண்ணீரில் துடைத்து நெய்யப்படும் சேலைகள் மென்பட்டு சேலைகள் ஆகும். இந்த சேலைகள்  500 கிராமிலிருந்து 700 கிராம் எடை கொண்டதாக இருக்கும். 4 பாவு நூல்களும் 6 ஊடை நூல்களும் சேர்த்து ஜரிகை அதிகமாக பயன்படுத்தி சுபமுகூர்த்த பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது. இந்த சேலைகள் 1500 கிராம் எடை கொண்டதாகும். மென்பட்டு சேலைகளைத்தான் இளம்பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்களும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதால் மென்பட்டு சேலைகள்  தயாரிப்பில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.



Tags : Sales halved: agony of minor silk weavers
× RELATED யானை தாக்கி விவசாயி பலி