×

சாலைகளை சுருக்கி பிளாட்பாரத்தை மட்டும் அகலப்படுத்தியதால் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிட்டதா தி.நகர்?:

வாகன நிறுத்த வசதிகளை மேம்படுத்த வேண்டும்
அதிகளவில் இ-கழிவறை அமைக்க வேண்டும்
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மக்கள் கோரிக்கை

சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள சாலைகளை சுருக்கி பிளாட்பாரத்தை மட்டும் அகலப்படுத்தும் பணிகளை செய்தால் மட்டும் ஸ்மார்ட் சிட்டியாக மாறிவிடாது தி.நகர் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையின் மிக முக்கிய வணிக பகுதி தி.நகர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதுபோன்று ஆயிரக்கணக்கான வணிகர்களும் தி.நகரை பயன்படுத்திவருகின்றனர். பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான  மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தி.நகர் போக்குவரத்து ெநரிசலில் சிக்கி தவிக்கிறது. மேலும் வாகன நிறுத்ததுவற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் தி.நகருக்குள் சென்று திரும்புவது பெறும் சிரமமாக உள்ளது. இந்நிலையில் தி.நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்கள்  நடந்து செல்ல ஏதுவாகவும் வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பகுதியை மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.  இதன்படி தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் பல்அடுக்கு வாகன நிறுத்தம், ரூ.7 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் பார்கிங் திட்டம், ₹30 கோடி மதிப்பீட்டில் கோமதி நாராயணா சாலை, வெங்கட் நாராயணா  சாலை, பர்கிட் சாலை ஆகியவற்றை ஸ்மார்ட் சாலையாக மாற்றியமைக்கும் பணி, ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் மாம்பலம் ரயில் நிலையம், மாம்பலம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி, ரூ. 75  கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணி, ₹ 90 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி உள்ளிட்ட பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத்தவிர்த்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பாண்டிபஜாரில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் ₹38 கோடி செலவில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் இந்த பணிகள்  தொடங்கப்பட்டன. பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீ., நீள பகுதி, தணிகாசலம் சாலை முதல் போக் சந்திப்பு வரை 380 மீ., நீள பகுதி, போக் சாலை சந்திப்பு முதல் அண்ணாசாலை வரை 565 மீ., நீள பகுதி உள்ளிட்ட 3  பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன.இந்த 3 சாலைகளில் 6 மீ., முதல் 12 மீ., வரை அகலம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டன.

இந்த நடைபாதைகளில் இருபுறங்களிலும் எல்இடி பல்புகள் உள்ள அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் சாலையில் உள்ள அனைத்து சுவர்களை அழகுப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும்  பொதுமக்கள் நடைபாதையில் அமரும் வகையில் இருக்கைகள் (ஸ்ட்ரீட் பர்னிச்சர்) அமைக்கப்பட்டது. அங்குள்ள மின் பெட்டிகள் வர்ணம் தீட்டப்பட்ட அட்டைகளை கொண்டு மறைக்கப்பட்டன. மேலும் சாலையில் உள்ள மரங்களை சுற்றி  பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து தி.நகர் பகுதி ஒருவழிப்பாதையாக மாற்றியமைப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தும் பணியை மட்டும் செய்யாமல், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தம் பணிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து  தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:  புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் வாகன நிறுத்தும் இடங்களாக மாறிவருகிறது. பெரிய நடைபாதையில் பலர் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். தணிகாசலம் சாலை முதல் அண்ணாசாலை வரை உள்ளிட்ட  நடைபாதையில் கார் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

போக்குவரத்து நெரிசல் நிறைந்த தி.நகரில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். நடைபாதை அகலம் அதிகரிக்கப்பட்டு சாலையின் அகலம் குறைக்கப்பட்டதால்  போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. அனைத்து நாட்களிலும் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பண்டிகை காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற இடங்களில் இருவழிப்பாதைகள் இருந்தால்தான்  கொஞ்சமாவது போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல்தான் அதிகமாகும். இதை குறைக்க உரிய நடவக்கை எடுக்க வேண்டும்.

இதைப்போன்று வாகன நிறுத்த வசதியும் முழுமையாக ஏற்படுத்தபடவில்லை. நடைபாைதை வளாகத்தை சுற்றியுள்ள 14 சாலைகளில் வாகனங்களை நிறுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த  திட்டத்தையும் நடைமுறைபடுத்தவில்லை. குறிப்பாக தி.நகர் பகுதியில் பல் அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.  இந்தப் பணியை விரைவாக முடிக்க வேண்டும். நடைபாதை வளாக திறப்பு விழா நடைபெற்றபோது பெரும்பலானவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்தனர். எனவே தி.நகர் நடைபாதை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.  அந்தப்பகுதியில் உள்ள இ- கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இவற்றை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பொதுமக்கள் தி.நகரில் பொதுமக்கள் நடந்து சென்று  பொருட்கள் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முழுமை நிறைவேற வாகன நிறுத்த வசதி, போக்குவரத்து நெரிசல் குறைப்பதற்கான நடவடிக்கை,  அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை ஆகியவற்றை முழுமையாக செய்ய வேண்டும்.  இல்லாவிடில் இந்த நடைபாதை வெறும் காட்சி பொருளாகவே மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : city ,road ,roads , Did you become a smart city by narrowing the roads and widening the platform alone ?:
× RELATED தென்சென்னையின் ரயில்வே துறை சார்ந்த...