×

மக்களின் பார்வையில்: இந்த வார பிரச்னைகள்

அரசு பஸ்கள் எங்கே ஆபீசர்?

புழல் ஊராட்சி ஒன்றியம் வடகரை, கிரான்ட் லைன், அழிஞ்சிவாக்கம், விளாங்காடு,  பாக்கம், தர்காஸ், மல்லி மாநகர், கண்ணம்பாளையம், பெரியார் நகர், ஆகிய ஊர்களுக்கு செல்லும் மாநகர பஸ் சரிவர இயக்கப்படுவதில்ைல. இதனால் பள்ளி  கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு  செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் இயங்கி வரும் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி சென்று வருகின்றனர். -லோகு, ரியல் எஸ்டேட், புழல்

போதை கும்பலால் பீதி

பரங்கிமலை - கிண்டி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து அந்தப் பகுதி இளைஞர்கள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை அருந்துகின்றனர். இதனால் அந்தப் பகுதியை ஒட்டியுள்ள ஆலந்தூர் ஜேம்ஸ் பகுதி  மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் போதையில்  வீடுகளில் முன்பு வைக்கப்பட்டுள்ள  அலுமினிய சமையல் பாத்திரங்கள் இரும்பு கம்பிகள் பிளாஸ்டிக் பொருட்கள்  போன்றவற்றை திருடி சென்று விடுகின்றனர். -ஆர்.டி.பூபாலன், வேன் உரிமையாளர், ஆலந்தூர்

இடுகாடு வசதி செய்து தருவீங்களா?

பெரும்பாக்கம் ஊராட்சி தண்டலம் கிராமம் சேமியர் மேடு பகுதியில் வசிக்கும் சுமார் 40 இருளர் குடும்பங்களுக்கு முறையான அரசு அனுமதியுடன் கூடிய இடுகாடு வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் உடலை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள்  எழுகிறது. எனவே மதுராந்தகம் வட்டாட்சியர் சேமியர் மேடு பகுதியில்முறையான அரசு ஆவணங்களுடன் கூடிய அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். -கன்னியப்பன், விவசாயி, தண்டலம்

மீன் மார்க்கெட் அவலம்

ஆவடியை அடுத்த பட்டாபிராம் தண்டுரை, பிள்ளையார் கோயில் தெருவில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சேரும் கழிவுகள் மார்க்கெட் வெளியே சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்துவது இல்லை. மேலும், இங்கு மீன்களை கழுவும் நீரும் செல்ல முறையான கால்வாய் இல்லை. இதனால், கழிவுநீர் மார்க்கெட் உட்பகுதியில் தேங்கி நிற்கிறது. -திவ்யா தமிழ்வாணன், இல்லத்தரசி, பட்டாபிராம்

குண்டும் குழியுமான சாலைகள்

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை நெமிலிசேரி அருகே உள்ள சாலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எளிதில் செல்ல முடியாமல் கடுமையாக  அவதிக்குள்ளாகின்றனர்.  
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோதிலால், தனியார் நிறுவன ஊழியர், நெமிலிசேரி

ஒரே நாளில் காலியாகும் ரேஷன் பொருட்கள்

திருப்போரூர் வட்டத்தில் அடங்கியுள்ள கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு கடைகளில் மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்கள் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு நாள் கழித்து சென்றாலும் காலியாகி  விட்டது என்று ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் இதனால் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு காலியாகி விட்டதாக கூறப்படும் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. - கிருஷ்ணவேணி, இல்லத்தரசி, திருப்போரூர்

தனி ஆம்புலன்ஸ் வேண்டும்

கிழக்கு கடற்கரை சாலை அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் கூவத்தூர், கொளத்தூர் இடையேயான பகுதிகளில் நிகழ்க்கிறது. விபத்துக்களில் சிக்கி  காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் பவுஞ்சூர் அல்லது செய்யூர் பகுதியிலிருந்து வரவழைக்கப்படுகிறது. நீண்ட தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்குள் உயிர் சேதங்கள் நிகழ்ந்து விடுகிறது. எனவே  இதனை தவிர்க்கும் வகையில் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிக்கென  தனி ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும்.-பூபாலன், கட்டிட தொழிலாளி, செய்யூர்

கண்டுகொள்ளப்படாத மறைமலைநகர்

மறைமலைநகர் நகராட்சியில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் காய்கறி வார சந்தை ஒன்றை நகரில் அமைக்க வேண்டும். அப்போதுதான் நகர மக்கள் ஒரே இடத்தில் நல்ல காய்கறிகளை வாங்கி பயனடைவார்கள். புதிய நகராட்சி உருவாகி  40 வருடம் ஆகியும் இதுவரை நகராட்சியில் ஆடு அறுக்கும் நவீன இறைச்சி கூடம் இல்லை. இதனால் பரிசோதனை இல்லாத தரம் குறைந்த நோய் தொற்றுள்ள ஆடு, கோழிகளை தெரு ஒர கடைகளில் வாங்கி உண்ணுகின்றனர். - எம்.எஸ். புகழ்மணி, தனியார்  கம்பெனி ஊழியர், மறைமலைநகர்

தேங்கிய குப்பைகளால் துர்நாற்றம்

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சரிவர குப்பை அள்ளுவது இல்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் உருவாகக் காரணமான கொசுக்கள்  உற்பத்தியும் பெருகிவிட்டது. இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டால் சரியான பதில் தர மறுக்கின்றனர். குப்பை கொட்டுவதற்கு இடமில்லை என்று கூறுகின்றனர். கந்தன், சமூக ஆர்வலர், பூந்தமல்லி

சிறுமழைக்கே சகதியாகும் சாலைகள்

மணலி மண்டலம் 16 வது வார்டில் வீட்டுவசதி வாரியத்தால் 1990களில் கட்டப்பட்ட வீடுகளில் இன்றுவரை சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை  மாநகராட்சி செய்து கொடுக்கவில்லை. இங்குள்ள  தெருக்கள்  மண் தரையாக உள்ளதால் சிறுமழைக்கே சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக ஆகிவிடுகிறது. கா.பாலமுருகன், வழக்கறிஞர், மணலி புதுநகர்

சிக்னல் சரியில்லாததால் விபத்து

குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் முறையாக செயல்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது இஷ்டத்திற்கு சாலையின் குறுக்கே தாறுமாறாக செல்கின்றனர். இதனால் இந்த சாலையில்  பயணிக்கும் பெண்வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அடிக்கடி சிறுசிறு விபத்துக்களும் நடக்கின்றன. .ராம், வியாபாரி, குன்றத்தூர்

மின்விளக்குகள் வேண்டும்

மீஞ்சூர் அடுத்த வல்லூர் வட சென்னை அனல்மின்நிலை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது. சாலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்  பல உள்ளன. நாள்தோறும் ஆயிரக்கனக்கான கனரக வாகனம்  செல்லும். எனவே உடனடியாக இந்த சாலையின் இருபுறங்களிலும் மின் விளக்குகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராகவா, தனியார் நிறுவன ஊழியர், மேலூர்

சிறுசிறு  பள்ளங்களால் ஆபத்து

வியாசர்பாடி ஜேஜேஆர் நகர் மற்றும் தேபர் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை அமைப்பதற்காக தெருக்களில் சுரண்டப்பட்டன.  இவைகள் சிறு சிறு பள்ளங்களாக மாறி தற்பொழுது  வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் பழுது அடைந்துள்ளது. மழையால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் சாலைகள் அமைக்க வேண்டும். சீனிவாசன், தனியார் பயிற்சி நிறுவன ஆசிரியர், பெரம்பூர்

Tags : In People's View: This Week's Problems
× RELATED யானை தாக்கி விவசாயி பலி