ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் விடுதிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை,: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள்குறித்து  தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கினாலும், விடுதிகளில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து  தரப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்குகிறது.   கடந்த 2018-19ல் ₹47.99 கோடி நிதி ஒதுக்கியும், பட்டியில் இனத்தவர்களுக்கு முறையாக செலவிடப்படவில்லை.  தமிழக ஆதி  திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1324 விடுதிகள் உள்ளன.

 சென்னையில் மட்டும் 14 ஆண்கள் விடுதிகள், 7 பெண்கள் விடுதிகள் அரசின் சொந்த கட்டிடத்திலும், 3 விடுதிகள் வாடகை கட்டிடத்திலும் இயங்கி வருகிறது.  தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மோசமான  நிலையில் உள்ளது.   குறிப்பாக, சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா விடுதியில், போதுமான இடவசதி, நூலகம், சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் போன்றவை கிடைக்காமல் மாணவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதனால் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று  கூறியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான விடுதிகளில் இதே நிலை நீடிப்பதாக தெரிவித்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?, அதன் தற்போதைய நிலை என்ன? என்று பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 28ம்  தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: