×

ஏமாற்றும் பருவமழையால் 5 ஆண்டுகளாக சரிவர விவசாயம் இல்லை: தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் உணவு தானிய உற்பத்தி

பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி அதிகரிப்பு
மக்கள் கூடுதல் விலை கொடுக்கும் அவலம்

தமிழகத்தை ஆண்டுதோறும் பருவமழை ஏமாற்றுவதால், உணவு தானிய உற்பத்தி கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை கூடுதல் விலை கொடுத்து  மக்கள் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 59 லட்சம் எக்டருக்கு மேற்பட்ட நிலங்கள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பயிர்களை சாகுபடி செய்வோரில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் ஆவர். இவர்கள்  பல்வேறு விதமான பயிர்களை பயிரிடுகின்றனர்.  குறிப்பாக நெல், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, மக்காச்சோளம் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் நிகர பாசப்பரப்பில் 64 சதவீதம் அளவிற்கு கிணறுகள், ஆழ்த்துளை கிணறுகள்  மூலமாகவும், 22 சதவீதம் வாய்க்கால்கள் மூலமாகவும், 14 சதவீதம் ஏரிகள் மூலமாகவும் நீர்பாசனம் கிடைக்கிறது.

இதைக்கொண்டே அவர்கள் பயிர்களை விளையவைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பருவமழையானது பொய்துப்போகிறது. விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக பல  இடங்களில் விவசாயம் செய்யும் அளவிற்கு மழை பெய்யவில்லை. இதன்காரணமாக உணவு தானிய உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. அதாவது கடந்த 2014-15ம் ஆண்டில் மொத்தமாக உணவு தானியங்களின் உற்பத்தி 127.95 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், 2018-19ம் ஆண்டில் 104.02 லட்சம்  மெட்ரிக் டன் அளவிற்கு குறைந்துள்ளது. இதனால் விவசாய நிலங்களில் கடன்வாங்கி பயிர்களை விதைத்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இது விவசாயிகளை மட்டும் அல்லாது அவர்களது குடும்பத்தினரையும் பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து அரசி, காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து  கொண்டுவருவதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வேறு வழியில்லாமல் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்களுக்கும், விவசாயிகள் அதிக விலை மற்றும் உழைப்பை கொட்டவேண்டியுள்ளது. எனவே உள்ளூரில் உற்பத்தியாவதற்கும், கூடுதல் விலையை வைத்து விற்பனை செய்ய  ேவண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலை மேலும் தொடரும் பட்சத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி குறைந்து, அதன்விலையும் கடுமையாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையினை அரசு மேலும் துரிதப்படுத்தி  மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Tamil Nadu , Five years of poor agriculture due to disappointing monsoon: Continuing declining food grain production in Tamil Nadu
× RELATED தென்மேற்குப் பருவக்காற்று...