×

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை,: பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் ேநற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசுப் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி மூப்பை நிர்ணயிப்பதும் பதவி உயர்வு வழங்குவதும் சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.  சட்டத்தின் அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்துள்ள வழிகாட்டுதல்களின்படியும் பார்த்தால் இந்த தீர்ப்பை குறை கூறவோ, விமர்சிக்கவோ முடியாது. அதே நேரத்தில் நியாயத்தின் அடிப்படையிலும் சமூகநீதியின்  அடிப்படையிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், நியாயமற்ற காரணங்களின் அடிப்படையில் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தமிழக அரசு துறைகளாக இருந்தாலும் மத்திய அரசுத் துறைகளாக இருந்தாலும் உயர்பதவிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கு இதைவிட  வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை. மத்திய அரசு பணிகளுக்கான பதவி உயர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது, அரசியலமைப்பு சட்டத்தின் 16வது பிரிவில் 4ஏ என்ற உட்பிரிவை சேர்ப்பதற்காக  அரசியலமைப்பு சட்டத்தில் 117 ஆவது திருத்தத்தை மத்திய அரசு செய்தது. இதன் மூலம் அச்சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

அதே உட்பிரிவை திருத்தி ‘‘மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’’ என்ற சொற்களை சேர்ப்பதன் மூலம் பதவி உயர்வில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, அதற்கான அரசியலமைப்பு சட்டத்  திருத்தத்தை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Constitutional ,Ramadas ,government , Ramadas appeals to central government to amend constitutional law
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி...