×

அடையாறு சீரமைப்பு பணிகள் ஆய்வு: பொதுமக்கள் கழிவுநீரை ஆறுகளில் விடக் கூடாது...வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பொதுமக்கள் கழிவுநீரை ஆற்றில் விடாமல் அரசின் தூர்வாரும் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  அடையாறு ஆற்றில் 3 வது கட்ட மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகளை  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்படி திருவிக பாலம் முதல் கோட்டூர்புரம் முகத்துவாரம் வரை  நடைபெறும் சீரமைப்பு பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்  அசோகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்டவைகளில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர்  உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 30 வடிகால்கள், பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 18 வடிகால்களை ஆழப்படுத்தி சீரமைக்கும் பணி  மூன்றாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. பல துறைகள் ஒன்றிணைந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தண்ணீர் தேங்குவதை தடுப்பது மட்டுமின்றி, கழிவுநீர் மூலம் ஏற்படும் கொசுக்கள் வருவதை குறைக்கும் வண்ணம் இந்த தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.  மெட்ரோ கழிவுநீர் வசதி இருந்தும் பொதுமக்கள் வீடுகளில் ஏற்படும் கழிவு  நீர்களை ஒரு சில இடங்களில் நீர்நிலைகளில் கலந்து விடுகின்றனர். இதன் காரணமாக கழிவுகள் கூவம், அடையாறு பக்கிங்காம் கால்வாய் மற்றும் கடற்கரை பகுதிகளில் கலப்பதால் மழைகாலத்தில் ஆற்றின் முகத்துவாரத்தில் வெள்ள நீர்  கடலில் கலக்க முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அதனை தடுப்பதற்காக மூன்றாவது கட்டமாக மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களும் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் முறையாக மெட்ரோ கழிவுநீர் குழாய் இணைப்பை பெற்று கழிவு நீரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.  எனவும் இந்த பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளித்தால் மட்டுமே தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையும். இதுவரை 80 சதவீத பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து  முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : rivers ,public ,Commissioner ,Revenue Administration , Survey of Adhikari Reconstruction Works
× RELATED அதிகரித்து வரும் வெயில்...