×

சார்பதிவாளர் அலுவலகங்களில் 10 ஆண்டாக பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்: வருவாய் குறைந்ததால் ஐஜி அதிரடி முடிவு

சென்னை: சார்பதிவாளர் அலுவலகங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர்களை மாற்றம் செய்ய ஐஜி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு  அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பே காரணம் என்று கூறப்படுகிறது. பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா தலைமையில் சீராய்வுக்கூட்டம் சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் டிஐஜிக்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில், அக்டோபர் 2019க்கான வருவாய் அறிக்கை, திரும்ப வழங்கப்படாத ஆவணங்களின் விவரம், நிலுவை ஆவணங்கள், கட்டிட களப்பணி நிலுவை விவரங்கள், சங்கப்பணிகள், சீட்டு வழக்குகள், இந்திய முத்திரை  சட்டப்பிரிவு 47ஏ (1)ன் கீழ் ஆவணங்கள் அனுப்ப வேண்டியவை மற்றும் ₹1 கோடி மதிப்பிலான ஆவணங்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரம், ஸ்டார் 2.0 மென்பொருள் செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

அப்போது, ஐஜி ஜோதி நிர்மலா,’சார்பதிவாளர் அலுவலகங்கள் மீது தொடர்ந்து புகார் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு யார் காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கு கூட  கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் வருகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு இந்த புகார் இனி வரக்கூடாது. இல்லையெனில் புகார் வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் அனைவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று   பேசினார். அப்போது ஒரு சார்பதிவாளர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தான் வெளியில் இடைத்தரகரை வைத்து கொண்டு இந்த வேலையில்  ஈடுபடுகின்றனர்.

சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக வரும் மக்களை கூட இடைத்தரகர்களை பார்க்குமாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்களால் தான் பதிவுத்துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அவர்களையும் 3 ஆண்டுகளுக்கு ஒரு  முறை மாற்ற வேண்டும்’ என்றனர்.
அப்போது பதிவுத்துறை ஐஜி, ‘10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கணினி உதவியாளர், கேமரா ஆப்ரேட்டர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையில் பதிவுத்துறை டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள்  ஈடுபட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

பதிவுத்துறை செயலாளர்  நெல்லையில் ஆலோசனை

பதிவுத்துறை செயலாளர் பாலச்சந்திரன் நெல்லை மண்டல டிஐஜி, மாவட்டபதிவாளர், சார்பதிவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வழிகாட்டி மதிப்பு தொடர்பாக வரும் மனு மீது தனித்துணை ஆட்சியர்கள் பணம் பெற்று  கொண்டு வருவாயை குறைத்து அனுப்புகின்றனர் என்று சார்பதிவாளர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, செயலாளர் பாலச்சந்திரன், ‘சார்பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பாக தனித்துணை ஆட்சியருக்கு  அனுப்பப்படும் மனுக்களில் பெரும்பாலானவைகளில் மதிப்பு குறைத்து தனித்துணை ஆட்சியர்கள் உத்தரவிடுகின்றனர். எல்லா மனுக்கள் மீது மதிப்பு குறைக்கப்பட்டது ஏன் என தெரியவில்லை. ஒரு சில மனுக்களில் வழிகாட்டி மதிப்பு  குறைக்காமல் உள்ளனர். அவர்கள் மதிப்பை உயர்த்தி கூட நமக்கு மனுவை அனுப்பி வைப்பதில்லை’ என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.



Tags : dependents offices , Employee relocation for 10 years in dependents offices: IG Action results in lower revenue
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் 50 லட்சம் வசூல்?