3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 42 கோஆப்டெக்ஸ் நிலையங்கள் மூடல்...வருவாய் குறைவை காரணம் காட்டி நடவடிக்கை

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 42 கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள மூடப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வருவாய் குறைவை காரணம் காட்டி இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.தமிழக அரசின் நிறுவனமான கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் வேட்டி, சட்டை, சேலை, போர்வை உட்பட பல்வேறு ரகங்களில் ஜவுளி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்கள் கைத்தறி,  விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களே இங்கு வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை நிலையங்கள் தனியாருக்கு இணையாக போட்டி போடும் வகையில் நவீனமயமாக்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான விற்பனை நிலையங்கள் முக்கியமான இடங்களில் அமைக்கப்படவில்லை. மேலும், கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம்  சார்பில் போதிய அளவுக்கு விளம்பரம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கோ ஆப்டெக்ஸ் வருவாய் இலக்கை அடைவதில் ஒவ்வொரு ஆண்டும் தடுமாறி வருகிறது. இந்நிலையில், கடந்த 2018ல் மட்டும் ₹40 கோடி வரை  இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் வருவாய் இழப்பு ஏற்படும், விற்பனை நிலையங்களை மூடுவதற்கு அதன் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு 210 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால், வருவாய் இழப்பு எனக்காரணம் கூறி கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் இயங்கி வந்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது 168 விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிலையங்களில் வருவாய் இல்லாததை மூடவும் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விற்பனை நிலையங்களில்  வருவாய் பெருக்க எந்தவொரு நடவடிக்கையும் நிர்வாகம் எடுக்காத நிலையில் அவற்றை மூடுவது தவறான நடவடிக்கை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, ‘கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக சகாயம் இருந்த காலகட்டத்தில் அரசு அலுவலகங்களில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையில் ஜவுளி பொருட்களை வாங்க அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து  விற்பனையை பெருக்க பல வழிகளில் நடவடிக்கை எடுத்தார். ஆனால், தற்போது நிர்வாக இயக்குனர் அதற்கான நடவடிக்கை எடுக்காததால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : stations ,Tamil Nadu ,Coopex , 42 Coopex stations across Tamil Nadu closed in 3 years ...
× RELATED தமிழகம் முழுவதும் ஜெயலலிதா...