×

உள்ளாட்சி தேர்தல் பதவி பங்கீட்டில் கடும் போட்டி: மேயர் சீட் கூட்டணிக்கு இல்லை...l 4 இடம் கேட்ட பா.ஜ, 3 கேட்ட பாமக, 2 கேட்ட தேமுதிகவுக்கு கைவிரிப்பு l 15 பதவிகளிலும் அதிமுகவே போட்டியிட முடிவு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளை கூட்டணிக்கு ஒதுக்குவது இல்லை என்று அதிமுக முடிவு செய்துள்ளது. 15 மேயர் பதவிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். இதனால் 4 மேயர் பதவி கேட்ட பா.ஜ,  3 கேட்ட பாமக, 2 கேட்ட தேமுதிக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய  கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அதன்படி, பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகளை மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 எம்பி சீட்டுகளில் கூட்டணி கட்சியான பாமகவுக்கு 7 இடம், பாஜகவுக்கு 5 இடம், தேமுதிகவுக்கு 4 இடம், தமாகாவுக்கு 1 இடம், புதிய நீதிக்கட்சி 1, புதிய தமிழகம் 1 என 19 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு  விட்டுக் கொடுத்தது. மீதமுள்ள 20 இடங்களில் அதிமுக போட்டியிட்டது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது. பெரிய அளவில் மகா கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டாலும், தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் ஒரு மக்களவை தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அதிமுக போட்டியிட்ட 20 இடங்களில் தேனி தொகுதியில் போட்டியிட்ட  ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இது அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

காரணம், ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக கட்சிக்கு மிகப்பெரிய தலைமை இல்லாவிட்டாலும், கூட்டணி  கட்சி தலைவர்களாக இருந்த பிரதமர் மோடி, பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரின் ஆதரவு ஓட்டு அதிமுகவுக்கு  கிடைக்கும் என்று அதிமுக தலைமை கணக்கு போட்டது. ஆனால் இந்த கணக்கு பலிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த மாதம் தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் கட்சி தலைமை உற்சாகம் அடைந்துள்ளது. இதே வேகத்தில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்  என்று அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர்.  மேலும் கூட்டணிக் கட்சியினரும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். கணிசமான இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டார். இதனால் இடைத்  தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் முழு மூச்சாக வேலை செய்தனர்.

இதனால் கட்சித் தலைவர்கள், கூட்டணி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, வருகிற டிசம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை வேகப்படுத்தும்படி மாநில தேர்தல்  ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமும் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.  அதன்படி, இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும், அதிமுக கூட்டணி கட்சிகள் கடந்த மக்களவை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் இருந்து அதிக சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று இப்போதே காய் நகர்த்தி  வருகிறது. குறிப்பாக, பாமக, பாஜ, தேமுதிக கட்சிகள் தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் அதிக அளவு மேயர் வேட்பாளர் சீட்டுகளை அதிமுகவிடம் இருந்து பெற முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன்படி, பாமக சார்பில் சென்னை, வேலூர், சேலம் உள்பட 3 மேயர் பதவிகளிலும், பாஜ சார்பில் சென்னை, கோவை, நாகர்கோவில், வேலூர் ஆகிய மேயர் தொகுதிகளையும், தேமுதிக சார்பில் திருச்சி உள்பட 2 மேயர் சீட்டுகள் வேண்டும்  என்று அதிமுகவுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தவிர்த்து அதிகளவில் நகராட்சி தலைவர் பதவிக்கான சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் இதுபோன்ற கோரிக்கைகளால் அதிமுக கட்சி தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் தொடரும் என்று அறிவித்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு மேயர்  பதவிகளை விட்டுக்கொடுக்க அதிமுக தலைமை தயாராக இல்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மேயர் பதவியை பாஜக, பாமக, அதிமுக ஆகிய 3  கட்சிகளுமே குறி வைத்துள்ளன. வேலூர் மேயர் பதவிகளை பாஜகவும், பாமகவும் கேட்டு வருகின்றன. இதனால் கூட்டணி கட்சிகளுக்குள் தற்போது பதவிகளைப் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வருகிற உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்கவே விரும்புகிறோம்.  அதற்காக மக்களவை தேர்தல் போன்று, உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் சீட்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக இல்லை. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, அதிமுக நிர்வாகிகளே அதிக இடங்களில்  வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அப்படி வழங்காவிட்டால், அதிமுக கட்சியில் இருந்து அவர்கள் வெளியேறி சுயேட்சையாக போட்டியிடும் நிலைமை ஏற்படும்.

மக்களவை தேர்தல் வேறு, உள்ளாட்சி தேர்தல் வேறு. மக்களவை தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மெகா கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு கூட்டணியால் யாருக்கும் எந்த பயனும்  இல்லாமல் போனது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு நியாயமான அளவுக்கு சீட் ஒதுக்கப்படும். ஆனால், தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இதே கருத்தைத்தான் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கூறியுள்ளார். அமைச்சர் கூறிய கருத்தைதான், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும்  வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர் தொகுதியில் போட்டியிட சீட் கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : BJP ,Mayor ,elections , Fierce contest in local body elections: Mayor's seat not in alliance ... 4 seats for BJP, 3 for BJP, 2 for Temutika ...
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...