×

நீர்வள, கட்டுமான பணிகளில் தரமில்லை என்றால் உயரதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை : அரசு எச்சரிக்கை

சென்னை: நீர்வளம் மற்றும் கட்டுமான பணிகளில் தரமில்லை என தெரிய வந்தால் உயர் அதிகாரிகள் என்றுகூட பாராமல் ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்படும் என்று ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை விடுத்தார். பொதுப்பணித்துறையில் நடக்கும் திட்ட பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், அரசு செயலாளர் மணிவாசன், நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல் கழக மேலாண்மை இயக்குனர் சத்யகோபால், கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த ஜூன் மாதம் குடிமராமத்து திட்ட பணிக்கு ₹499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணி 65 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது. 35 சதவீத பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். குடிமராத்து திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்தால் கூட அந்த ஏரியை அப்படியே விட்டு விடக்கூடாது. பொறியாளர்கள்- விவசாய சங்கங்களுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

1000 கோடியில் குடிமராமத்து திட்டப்பணிகள் அடுத்தாண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த ஏரிகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தடுப்பணைகள் எங்கெல்லாம் அமைக்க முடியுமா அந்த இடங்களில் எல்லாம் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு தடுப்பணை 3 அடி வரை மட்டுமே அமைக்கப்படுகிறது. 6 அடி முதல் 12 அடி வரை தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக திட்ட பணிகளுக்கு மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இதற்காக தான் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.
 ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை ஜனவரி மாதத்துக்குள்ளாவது முடிக்க வேண்டும். அதன்பிறகும் தொடர்ந்து பணிகளை செய்யக்கூடாது. கட்டுமான பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். கட்டிடம் கட்டும் போது தண்ணீர் தெளிக்க வேண்டும். அப்போதுதான் கட்டிடம் இறுகி உறுதித்தன்மையாக இருக்கும்.  ஒவ்வொரு கட்டிடமும் 50 வருடம் தரமாக இருக்கும் வகையில் கட்ட வேண்டும்.

நிலம் ஆர்ஜிதம் எனக்காரணம் கூறி எந்த பணிகளையும் காலதாமதம் செய்யக்கூடாது. மருத்துவ கட்டுமான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீர்வளம் மற்றும் கட்டுமான பணிகள் தரமில்லை என்பது தெரிய வந்தால் உயர் அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று திட்ட பணிகளை விரைந்து முடிக்காமல் இழுத்தடித்தால் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் இருந்தால் உடனடியாக அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், உங்களுக்குள் இருக்கும் பிரச்னையால்தான் பதவி உயர்வு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் முன்னிலையில் அதிகாரிகள் வாக்குவாதம்

நீர்வளம் மற்றும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்காததற்கான காரணத்தை முதல்வர் எடப்பாடி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது, முதல்வர் எடப்பாடிக்கு கட்டுமான பணி முடிந்த புகைப்படத்தை ஒளிபரப்பும் போது அதிகாரி ஒருவர் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளின் கட்டுமான பணி படத்தை திரையிடுவதாக கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அந்த அதிகாரியிடம் மற்ற அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதல்வர் எடப்பாடி சமாதானப்படுத்தினார். அதன்பிறகு அந்த பவர் பாயிண்ட் மூலம் கட்டுமான பணி மேற்கொண்ட புகைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

Tags : water authority , No disciplinary action, water authorities
× RELATED காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்ட...