×

மாணவி பாத்திமா மரணத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்று கருத்து கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சரின் குறைதீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு 1548 பயனாளிகளுக்கு பட்டா, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை, விதவை சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் உள்ளிட்டவைகளை வழங்கினார். திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரம்பூர் ஆகிய 5 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மொத்தம் 1 கோடியே 81 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக அரசு மக்களின் தேவைகளை உணர்ந்து விரைந்து செயல்படுகிறது. பொதுமக்களிடம் குறைகளுக்கான மனுக்களை பெற்று 30 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள்ளாக அவர்களின் குறைகளுக்கான தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அரசு உறுதியாக உள்ளது. காவல்துறை தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Jayakumar Fathima ,student ,Jayakumar ,death , Fathima student , punished in death,Minister Jayakumar
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...