×

சொத்து அடைவதற்காக உயிரோடு உள்ள மகனுக்கு இறப்பு சான்று வாங்கிய தாய் மீது வழக்கு : ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை:  சொத்தை அடைவதற்காக உயிருடன் இருக்கும் மகனை இறந்து விட்டதாக கூறி இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளதாக தாய், சகோதரன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மகன் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: என் தந்தை முத்துசாமி கடந்த 2001ல் காலமானார். அவரது பெயரில் தாம்பரம் அருகே சொத்துக்கள் உள்ளன. அவரின் சொத்துக்களுக்கு எனது தாய் தனபாக்கியம், நான் மற்றும் எனது அண்ணன் ஆகியோர் வாரிசுதாரர்களாக உள்ளோம். தாம்பரம், முடிச்சூர் சாலையில் லட்சுமிபுரத்தில் வசித்து வருகிறோம். கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தையின் சொத்துக்களை முழுவதுமாக அபகரிக்கும் எண்ணத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வாரிசு சான்றிதழை என் தாயாரும், அண்ணனும் வாங்கியுள்ளனர். அதில் என் பெயர் இல்லை. இவர்களுடன் கூட்டு சேர்ந்து தாம்பரம் தாசில்தார் இந்தசான்றிதழை வழங்கியுள்ளார்.

இது குறித்து என் தாயாரிடம் கேட்டபோது, புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் சொத்தில் உரிய பங்கு தருவதாக கூறினார். இதை நானும் நம்பினேன்.
ஆனால் அவர்கள் திட்டமிட்டு, கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி நான் இறந்து விட்டதாக தெரிவித்து அதற்கான சான்றிதழை வழங்குமாறு தாம்பரம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 2010ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தாம்பரம் நகராட்சி ஆணையர், என்னுடைய இறப்பு சான்றிதழை எனது தாயிடம் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை காட்டி, எங்கள் குடும்பச் சொத்தை என் தாயாரும், சகோதரனும் விற்பனை செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து காஞ்சிபுரம் கலெக்டர், போலீஸ் எஸ்பி சூப்பிரண்டு ஆகியோருக்கு புகார் கொடுத்தேன். தாம்பரம் தாசில்தார் கொடுத்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யும்படி கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அவர் போலி சான்றிதழ் கொடுப்பதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதற்கு பதில், அவர்களை காப்பாற்றும் விதமாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், வாரிசு சான்றிதழை ரத்து செய்யவேண்டும் என்றால், அது வழங்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் வட்டார வருவாய் அதிகாரியிடமும், 3 ஆண்டுகளுக்குள் மாவட்டகலெக்டரிடமும் விண்ணப்பம் செய்யவேண்டும். ஆனால், அதற்கான காலஅவகாசமும் முடிந்துவிட்டதால் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.  எனவே, வாரிசு சான்றிதழையும், என்னுடைய இறப்பு சான்றிதழையும் ரத்து செய்யும்படி வருவாய்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தாம்பரம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தான் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறுவதால் இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags : death , Mother sues,for son's death certificate
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...