×

ஐஐடி மாணவி தற்கொலைக்கு முன் பதிவுசெய்த செல்போன் குறுந்தகவல்கள், டைரி, ஆடியோ போலீசில் ஒப்படைப்பு : பேராசிரியர்கள் வெளியூர் செல்ல தடை

சென்னை: ஐஐடியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், அவர் தகவல்களை பதிவு செய்து வைத்திருந்த செல்போன் ஆதாரம், டைரி, தற்கொலையை பார்த்து முதலில் கூறிய நபரின் ஆடியோவை அவரது தந்தை போலீசில் நேற்று ஒப்படைத்தார். மேலும் விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் வெளியூர் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் கிளிகொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப் (18). இவர், சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் எம்ஏ முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த வாரம் மாணவி திடீரென்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவி வைத்திருந்த செல்போனும் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற பிறகு, பாத்திமா லத்தீப்பின் செல்போனை பெற்றோர் சார்ச் போட்ட பிறகு பார்த்தனர். அப்போது, அதில், மாணவிக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2 பேராசிரியர்களும் தொல்லை கொடுத்துள்ளதையும் எழுதி வைத்திருந்தார். இதை பார்த்ததும், எனது மகள் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். அல்லது கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி, அவரது தந்தை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்தார். அவர், தமிழக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீவிரமாக விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஐஐடி வளாகத்துக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு கோட்டூர்புரம் போலீசில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் காலையில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் 2 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி திரிபாதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, தனது மகள் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, ஆயிரம்விளக்கு பகுதியில் தங்கியுள்ள அப்துல் லத்தீப்பிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர் மெஹலானி ஆகியோர் நேற்று காலையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி, செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த குறுந்தகவல்களையும், செல்போனையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். மேலும், தற்கொலைக்கு முதல்நாள், மாணவி உணவு அருந்தும் அறையில் அழுது கொண்டிருந்தார். அப்போது கண்ணாடி அணிந்த ஒரு மாணவி, அவரை தேற்றியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தினால் உண்மை தெரியும் என்றும் அப்துல் லத்தீப் தெரிவித்தார். இந்த விசாரணை முடிந்ததை தொடர்ந்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்கள் 3 பேரும் வெளியூர் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி தற்கொலை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது ஐஐடி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை முடியும் வரை சென்னையில் இருப்போம்

விசாரணைக்கு பிறகு அப்துல் லத்தீப் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர், டிஜிபி உள்பட இதுவரை நான் சந்தித்த அனைவருமே என்னுடைய கைகளை பற்றிக்கொண்டு உங்களுக்கான நீதி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். என் மகள் நன்கு படிக்கக்கூடியவள். அவளுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கேட்ட தகவல்களை கொடுத்துள்ளேன். கணினி உள்ளிட்ட பொருட்களை விசாரணைக்கு எடுத்து வர சொன்னார்கள், விசாரணை முடியும் வரை இங்கு தான் இருக்க உள்ளோம். தற்கொலை செய்து கொள்ளும் முன் 28 நாட்களுக்கான டைரி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்கொலையை முதலில் பார்த்த நபர் எங்களிடம்  பேசிய ஆடியோவையும் கொடுத்துள்ளோம் என்றார்.

இதை தொடர்ந்து வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை சந்தித்த பிறகு கூறுகையில், ‘‘போலீஸ் கமிஷனரை சந்தித்தோம், முக்கிய வழக்காக விசாரிப்பதாகவும், கேரள டிஜிபி அவரிடம் பேசியதாகவும் கூறினார். என்னுடைய சொந்த மகளுக்கு ஏற்பட்டால் எப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ அதேபோல் விசாரணை செய்து குற்றவாளிகள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags : student ,IIT ,suicide ,Professors , IIT student, committing suicide, cell phone recordings, diary and audio copies ,Prof
× RELATED சென்னை ஐஐடிக்கு ரூ513 கோடி நன்கொடை; ஏஐ...