×

தானமாக எழுதி தர அதிகாரிகள் வலியுறுத்தும் நிலையில் கோயில் நிலத்தை யார் பெயரில் மாற்றி பட்டா அளிப்பார்கள்?

* தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்கம் அரசுக்கு கேள்வி

சென்னை: கோயில் நிலத்தை அதிகாரிகள் யார் பெயருக்கு பட்டா அளிப்பார்கள் என்று தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து  அச்சங்க தலைவர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் மனைகளில் தற்போது குடியிருப்போரின் பெரும்பாலானவர்களின் பெயர்கள் கோயில் பதிவேட்டில் இல்லை. பதிவேட்டில் உள்ளவர் இறந்து போனதால் வாரிசுதாரர்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் பெயர்கள் பதிவேட்டில் இல்லை. மேலும் மனையில் தங்கள் சொந்த செலவில் கட்டிய வீட்டை மகன்/மகள் திருமணத்திற்காகவோ, அல்லது கடன்சுமை காரணமாகவோ மனைநீங்களாக மேற்கூரையை வேறொருவருக்கு பகுதி மாற்றம் செய்திருப்பார். இதை அரசாங்கமும் அனுமதித்து பத்திரப்பதிவுத்துறையும் பதிவு செய்து வந்தது. பகுதிமாற்றம் செய்து வாங்கியவர்களின் பெயரும் பதிவேட்டில் இல்லை.

பெயர்மாற்றத்திற்கு கோயில் நிர்வாக அதிகாரியிடம் மனு கொடுத்தால் மனையில் கட்டியுள்ள வீட்டை தானமாக எழுதிக்கேட்பதுடன், நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி அல்லாமல் தன்னிச்சையாக வாடகையை பலமடங்கு உயர்த்தி முன்தேதியிட்டு அறிவிப்பு கொடுத்துள்ள புதிய வாடகையை நிலுவை இல்லாமல் கட்டவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கின்றனர். மனையில் எங்கள் சொந்த செலவில் கட்டிய வீட்டை தானமாக எழுதிக்கேட்பது ஏற்புடையது அல்ல. மேலும் வாடகை உயர்வு பற்றிய மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது புதிய வாடகையை செலுத்த வற்புறுத்துவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

அரசு ஒருபுறம் அரசாணை 318யை வெளியிட்டு கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது. ஆனால், மறுபுறம் அறநிலையத்துறையின் மூலம் மேற்கூரையை தானமாக எழுதிக்கேட்கிறது. கோயிலுக்கு தானமாக கொடுத்த பிறகு யார் பெயருக்கு பட்டா அளிப்பார்கள். பெயர்மாற்றம் செய்து கொள்ளாவிட்டாலும் இப்போது குடியிருப்பவருக்கு பட்டா கிடைக்காது, கோயில் மனைகளில் குடியிருப்போர் திரிசங்கு நிலையில் இருந்து கொண்டு அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு எந்தவித நிபந்தனையுமின்றி பெயர்மாற்றம் செய்து கொடுத்தால்தான் விடிவு பிறக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : temple land ,charity ,insurgency ,land ,writing authority , temple land ,voluntary writing authorities?
× RELATED தீ தொண்டு நாள் வார விழா