×

டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் தடை உள்ளதா? : ஆய்வுக்கு நிர்வாகம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவு கடைபிடிக்கப்படுகிறதா என கவனிக்க அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இதேபோல், டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள பார்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கேரி பேக், வாட்டர் பாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என பார் உரிமையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், மறைமுகமாக பல பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.  

எனவே, தற்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பார்களில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கடைகளை ஆய்வு செய்யும் நேரத்தில் பார்களையும் ஆய்வு செய்ய வேண்டும். பாரபட்சம் இல்லாமல் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோல், மதுக்கூடத்தில் மதுக்கூட உரிமம் வைக்கப்பட்டுள்ளதா, ஒவ்வொரு மாதமும் குறுமத்தொகை முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு மதுக்கூடம் நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆய்வு செய்து கிடப்பில் போடப்பட்டுள்ள கோப்புகளை விரைவில் நிர்வாகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags : inspection , Is there a plastic ban ,tasmac bars?
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...