×

80 சதவீதம் வாக்குப்பதிவு இலங்கையின் புதிய அதிபர் யார்? : தமிழர், முஸ்லிம்களை வாக்களிக்க விடாமல் தடுப்பு

கொழும்பு: இலங்கையில் நேற்று துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்களுக்கு இடையே அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் உடனடியாக எண்ணப்படுவதால், புதிய அதிபர் கோத்தபயாவா அல்லது சஜித் பிரேமதாசாவா? என பலத்த போட்டி நிலவுகிறது. இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த  நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இவர் விடுதலைப் புலிகளுடன் போர் நடந்தபோது ராணுவ அமைச்சராக இருந்தவர் என்பதால், இலங்கைக்கு மிகவும் பாதுகாப்பனவராக கருதப்படுகிறார். ஆளும் ஐக்கிய தேசிய கட்சி (யுஎன்பி) சார்பில் சஜீத் பிரேமதாசா (52) போட்டியிடுகிறார். இவர் இலங்கையில் கடந்த 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை அதிபராக இருந்த ரணசிங்கே பிரேமதாசாவின் மகன். ரணசிங்கே விடுதலைப் புலிகளால் கடந்த 1993ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி(என்பிபி) கட்சியின் அனுரா குமார திசநாயகேவும் 3வது முக்கிய வேட்பாளராக உள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதற்காக, நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு அதிகாரிளும், 60 ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு படையினர் 8 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் தேர்தல் பார்வையாளர்களும் அதிபர் தேர்தலை கண்காணித்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்தாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இலங்கையின் வடமேற்கு பகுதியில் உள்ள புட்டலம் என்ற கடலோர நகரிலிருந்து முஸ்லிம் வாக்காளர்கள், ஓட்டு போடுவதற்காக 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் அருகில் உள்ள மன்னார் மாவட்டத்தில் உள்ள வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றனர். அப்போது, அவர்களின் வாகனங்கள் தந்திரி மலை அருகே சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. பின்னர், 2 பஸ்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கற்களும் வீசப்பட்டன. ஆனால், இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தடுப்புகளை அகற்றி வாக்காளர்களை காப்பாற்றினர்.

இலங்கையில் நேற்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடந்துள்ளது. வாக்களிக்க சென்ற மலையகத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை சிலர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக மோதல்களும் நடந்துள்ளன.  யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் சோதனைச் சாவடிகள் அமைத்து தமிழர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டதும், அங்கு போலீசார் அனுப்பப்பட்டு, ராணுவ தடுப்புகள் அகற்றப்பட்டன.

இலங்கையில் அதிபரை தேர்வு செய்வதில், சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனால், இவர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சிகள் பல இடங்களில் நடந்துள்ளன. முன்னணி வேட்பாளர்களான கோத்தபயா, கொழும்பு அருகேயுள்ள வாக்குச்சாவடியிலும், சஜித் பிரேமதாசா அம்மாந்தோட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர். பல இடங்களில் மழை பெய்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் நேற்று மாலையே உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் நேற்று இரவு முதல் வெளிவரத் தொடங்கியது.

இன்று தெரிந்து விடும்

இலங்கை அதிபர் தேர்தலில் 50 சதவீதத்துக்கு மேலான ஓட்டுக்களை பெறும் வேட்பாளர், புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார். இதற்கு ஏற்றபடி 3 ேவட்பாளர்களை முன்னுரிமை அடிப்படையில் வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 50 சதவீத ஓட்டுக்களை எந்த வேட்பாளரும் பெறவில்லை என்றால், அதிக ஓட்டுக்களை பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களின் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். ஆனால், இது போன்ற சூழல் இலங்கை அதிபர் தேர்தலில், இதுவரை நடந்ததில்லை.  எப்போதும் ஒரு வேட்பாளர் 50 சதவீத இலக்கை தாண்டிவிடுவார். இலங்கையின் புதிய அதிபர் யார் என இன்று தெரியும்.


Tags : Chancellor ,Sri Lanka ,voting ,Tamils ,Muslims , Who is the new Chancellor ,Sri Lanka
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...