ஹாங்காங்கில் சாதாரண உடையில் ராணுவத்தை களம் இறக்கியது சீனா: தொடர் போராட்டத்தை ஒடுக்க முயற்சி

பீஜிங்: ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதால், அங்கு சீன ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீருடை  அணியாமல், ரோடுகளில் உள்ள தடுப்புகளை அகற்றும் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் காலனியாக இருந்த ஹாங்காங், 22 ஆண்டுகளுக்கு முன் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தனி நிர்வாகம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் அரசியல் சாசன சட்டப்படி, உள் விவகாரங்களில் சீன ராணுவம் தலையிடக்  கூடாது. ஹாங்காங் நிர்வாகம் உதவி கேட்டால் மட்டும், சீன ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபடலாம்.

இந்நிலையில் ஹாங்காங்கில் குற்றம் புரிபவர்களை சீனாவில் விசாரிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதை கண்டித்து அங்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்காரர்கள்  ரோடுகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை முடக்குகின்றனர்.  இந்நிலையில், அங்கு சீன ராணுவத்தினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீருடை அணியாமல், பச்சை நிற டி-சர்ட், கருப்பு ஷாட்ஸ் அணிந்து, பாப்டிஸ்ட் பல்கலை வளாகம் அருகில் உள்ள ரோடுகளில் உள்ள தடுப்புகளை அகற்றும்  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசாரும், தீயணைப்பு படையினர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

போராட்டம் தொடங்கி 5 மாதங்களில், இங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது இதுவே முதல் முறை. இவர்களை போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்களா என தெரியவில்லை. இந்நிலையில் பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜின்பிங் அளித்த பேட்டியில், ‘‘ஹாங்காங்கில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவந்து, சட்டம் ஒழுங்கை அமல்படுத்துவதுதான் தற்போது முக்கியமான பணி’’ என  கூறினார்.

Related Stories:

>