×

இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சுருட்டியது இந்தியா

இந்தூர்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை பெற்றது. ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. முஷ்பிகுர் ரகிம் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை  தொடங்கிய இந்தியா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 243 ரன், புஜாரா 54, ரகானே 86 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ஜடேஜா 60 ரன், உமேஷ் 25 ரன்னுடன்  ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் அபு ஜாயித் 4, எபாதத், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மூன்றாம் நாளான நேற்று இதே ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக இந்திய அணி அறிவித்ததை அடுத்து,  வங்கதேச அணி 343 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்கள் ஷத்மன் இஸ்லாம், இம்ருல் கேயஸ் தலா 6 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் மோமினுல் ஹக் 7 ரன், முகமது மிதுன்  18, மகமதுல்லா 15 ரன் எடுத்து ஷமி வேகத்தில் அடுத்தடுத்து வெளியேற, வங்கதேசம் 72 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், முஷ்பிகுர் ரகிம் - லிட்டன் தாஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. தாஸ் 35  ரன் எடுத்து அஷ்வின் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த மெகதி ஹசன் மி ராஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, முஷ்பிகுர் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. மிராஸ்  38 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற விக்கெட்டை பறிகொடுத்தார்.

தைஜுல் இஸ்லாம் 6 ரன், முஷ்பிகுர் 64 ரன் (150 பந்து, 7 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். எபாதத் உசேன் 1 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் உமேஷ் வசம் பிடிபட, வங்கதேசம் 2வது இன்னிங்சில் 213 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (69.2  ஓவர்). அபு ஜாயித் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் முகமது ஷமி 16 ஓவரில் 7 மெய்டன் உட்பட 31 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். அஷ்வின் 3, உமேஷ் 2, இஷாந்த் 1 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த மயாங்க் அகர்வால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் பகல்/இரவு டெஸ்ட் என்பதால்  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் இளஞ்சிவப்பு வண்ணப் பந்து உபயோகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 60 புள்ளிகளை அள்ளிய இந்திய அணி, இதுவரை விளையாடி உள்ள 6 டெஸ்டிலும் வெற்றியை வசப்படுத்தி மொத்தம் 300 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.


அணியின் தரத்தை இன்னும் உயர்த்த விரும்புகிறோம்...இந்திய கேப்டன் கோஹ்லி

இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. களத்தில் இன்னொரு மிகத் துல்லியமான செயல்பாடு இது. குறிப்பாக, தொழில்முறையிலான பேட்டிங் எதிர்வரும் வெளிநாட்டு தொடர்களை நம்பிக்கையுடன்  எதிர்கொள்ள உதவும். இதையே நாங்கள் விரும்புகிறோம். அனைத்து வீரர்களுக்கும் எனது பாராட்டுக்கள். பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பங்களித்தனர். இந்த பந்துவீச்சு கூட்டணியை பார்க்கும்போது, எந்தவிதமான ஆடுகளமாக இருந்தாலும்  அசத்த முடியும் என்ற தன்னம்பிக்கை எழுகிறது. நல்ல வலுவான பந்துவீச்சு எந்த ஒரு அணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதனைகளை பற்றி நாங்கள் நினைப்பதில்லை. புள்ளிவிவரப் பதிவாக அது எப்போதும் இருக்கும். எங்கள் கவனம்  எல்லாம் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே. அணியின் தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள விரும்புகிறோம். இளம் வீரர்களை ஊக்குவித்து முழுமையாகத் தயார் செய்வதிலும் கூடுதல் கவனம் செலுத்துவோம். அடுத்து பகல்/இரவு டெஸ்ட்  போட்டியில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.



Tags : India ,Bangladesh ,innings , India rode Bangladesh by an innings and 130 runs
× RELATED ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர போவதாக இமெயில் அனுப்பிய ஐஐடி மாணவர் கைது