குழித்துறை ரயில் நிலையத்தில் தரமற்ற முறையில் பராமரிப்பு பணிகள்: லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்கவில்லை

கருங்கல்: குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு அடுத்தப்படியாக அதிக வருமானம் ஈட்டித்தருவது குழித்துறை ரயில் நிலையம். இங்கிருந்து திருவனந்தபுரம், மும்பை உள்பட வட மாநிலங்களுக்கு தினசரி ஏராளமான ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில்களில் கேரள மற்றும் வெளியூர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். குழித்துறை ரயில் நிலையத்தை விட பாறசாலை ரயில் நிலையம் சிறியதாகும். இருப்பினும் குழித்துறை ரயில் நிலையத்தில் நிற்காத பெரும்பாலான ரயில்கள் பாறசாலை ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. குமரி மாவட்டம் இதற்கு முன்பு வரை மத்திய அமைச்சர்களை பெற்றிருந்தபோதும், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவே இல்லை.

இந்தநிலையில் குழித்துறை ரயில் நிலையத்தை பார்வையிட உயரதிகாரிகள் குழு ஒன்று விரைவில் வர உள்ளது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக ரயில் நிலைய கட்டிடத்திற்கு வர்ணம் பூசுதல், பயணிகள் காத்திருப்பு இடங்களில் புதிதாக இரும்பு மேற்கூரை சீட்டுகள் அமைக்கும் பணிகள்  நடைபெற்றன. இதுதவிர பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு தான் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. இந்தநிலையில் இன்று காலை குழித்துறை பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழையில் குழித்துறை ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரும்பு மேற்கூரையில் இருந்து நீர் கசிந்து பயணிகள் நனைத்தனர்.

இது ரயிலுக்கு காத்துநின்ற பயணிகளுக்கு சிரமத்தையும், அவஸ்தையையும் ஏற்படுத்தியது.. அவசர கதியில், தரமான முறையில் பணிகள் நடைபெற்றதுதான் இதற்கு காரணம் என பயணிகள் குற்றம்சாட்டினர். எனவே சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway station , Kuzhithurai train stations, maintenance
× RELATED பராமரிப்பு பணி காரணமாக சி.பி.எல்.நகர்...