×

களக்காடு பகுதியில் கனமழை: குளம் உடைந்து வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது

களக்காடு: களக்காடு பகுதியில் பெய்த மழையினால் குளம் உடைந்து வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலையில் அரிப்பு ஏற்பட்டு பாலம் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். களக்காடு தலையணை செல்லும் சாலையில் கிளராகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்திற்கு தலையணை சீவலப்பேரியான் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கிளரா குளம் நிரம்பி வழிந்தது. இன்று அதிகாலை களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழையினால் கிளராகுளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் குளத்தின் கரை உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறியது.

இந்த தண்ணீர் அருகில் உள்ள சாலை வழியாக ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயல்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து வாழைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலையில் வெள்ளம் வழிந்தோடியதால் அரிப்பு ஏற்பட்டு விவசாயிகள் தங்களது சொந்த செலவில் அமைத்த பாலம் சேதமடைந்தது. குளம் உடைந்தததை அடுத்து குளத்திற்கு வரும் தண்ணீர் அடைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டது. இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குளத்தின் உடைப்பை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pond ,area ,Kalakkad , Kalakkad, heavy rains flooded the fields
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...