×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: சாலை அரிப்பால் போக்குவரத்து துண்டிப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால்  பெரியாறு 3 அணையிலிருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் அரிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பிளவக்கல் என்ற இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 47.64 அடி மொத்த உயரமுள்ள பெரியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. 44.62 அடி உயரமுள்ள கோவிலாறு அணை நீர்மட்டம் 30 அடியாக உள்ளது.

நேற்று அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கோவிந்தன்மேடு என்ற இடத்தில் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து நெல் வயலுக்குள் புகுந்தது. சாலையில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டுப்பூச்சி நகர், கிழவன்கோவில், பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.

தாசில்தார் ராஜா உசேன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தை இன்று காலை பார்வையிட்டு அரிப்பை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். சாலையில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.


Tags : catchment area ,Road erosion , Rain, road erosion, traffic disruption
× RELATED காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...