×

மயிலாடுதுறை, திருவையாறில் கடைமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான மக்கள் காவிரியில் புனித நீராடல்

திருவையாறு: மயிலாடுதுறை, திருவையாறில் இன்று கடைமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி சுவாமிகள் தீர்த்தவாரியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர். துலா மாதம் என்னும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரியில் நீராடினால் புண்ணியம் என்பது ஐதீகம். இதன் முதல் நாளான 1ம் தேதி திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை காவிரியில் முதல் முழுக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினர். இன்று ஐப்பசி கடைசிநாள் என்பதால் இதை கடை முழுக்கு என கொண்டாடுகிறார்கள். இதையொட்டி இன்று தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் கடைமுழுக்கு விழா நடந்தது. இதற்காக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவையாறு வந்து காவிரியில் நீராடி, ஐயாறப்பரை தரிசித்தனர்.

காலை 10மணி அளவில் ஐயாறப்பர் தீர்த்தவாரியும் நடந்தது. கடைமுழுக்கு விழாவையொட்டி காவிரி படித்துறையில் ஏராளமான தற்காலிக கடைகள்அமைக்கப்பட்டிருந்தது. கரும்பு விற்பனையும் அமோகமாக நடந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியிலும் கடைமுழுக்கு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அபயாம்பிகை மயூரநாதருக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலாவாக வந்து காவிரி துலா கட்டத்தை அடைந்தது. அங்கு தீர்த்தவாரி நடந்தது. மயிலாடுதுறையில் நாளை முடவன் முழுக்கு நடைபெறும். இன்று கலந்து கொள்ள முடியாத மாற்று திறனாளிகள் நாளைகாவிரியில் நீராட இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Mayiladuthurai ,Mall Festival ,Thiruvaiyaril ,Kaveri Mayiladuthurai , Mall Festival at Mayiladuthurai, Thiruvaiyaril
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...