டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் டெண்டர் எடுப்பதில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதிகளில் உள்ள சாலை பராமரிப்பு, பாதாள சாக்கடை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு, நகராட்சி பள்ளிகள் பராமரிப்பு, குடிநீர் வினியோகம், நகராட்சி திருமண மண்டபம் பராமரிப்பு உட்பட ஏராளமான பணிகளுக்கு நகராட்சி சார்பில் டெண்டர் விடுவது வழக்கம். இவ்வாறு விடப்படும் டெண்டருக்கு அரசு விதிமுறைகள் உள்ளது. ஆனால் தாம்பரம் நகராட்சியில் டெண்டர் விடுவதற்கு என எந்த ஒரு அடிப்படை அரசு விதிமுறைகளையும் பின்பற்றப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டுஅ உள்ளது. இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபம் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ஆளும்கட்சியினர் எடுக்க முயன்றுள்ளனர். இதற்காக தேனியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து  தகவலறிந்த இபிஎஸ் ஆதரவாளரான பரசுராமன் என்பவர் டெண்டர் எடுப்பதற்கு வந்து டெண்டர் எனக்குதான் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் டெண்டரை யார் எடுப்பது என இருவர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெண்டர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான டெண்டர்களை நகராட்சி ஒப்பந்ததாரர்கள் தான் எடுப்போம். ஆனால் தற்போது நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபம் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர் விடுவதற்கான எந்த ஒரு அறிவிப்புகளும் நகராட்சி ஒப்பந்தக்காரர்கள் ஆகிய எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் தேனியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் வந்து திருமண மண்டபம் பராமரிப்பு பணிக்கான டெண்டரை எடுக்க முயற்சி செய்கிறார். இதுகுறித்து தகவலறிந்த இபிஎஸ் ஆதரவாளர் இதில் தலையிட்டு பரசுராமன் என்பவரை டெண்டர் எடுக்கும்படி நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்புகிறார். இதில் டெண்டர் யார் எடுப்பது என இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஆகிய எங்களுக்கே நகராட்சியில் டெண்டர் விடுவது தெரியாத ஒரு நிலையில் தேனியில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர், இங்குள்ள இபிஎஸ் ஆதரவாளரும் எப்படி டெண்டர் குறித்த தகவல் தெரிந்தது என மர்மமாக உள்ளது. எனவே நகராட்சியின் டெண்டரை ஆளுங்கட்சியினர் அவர்களது அதிகாரத்தை வைத்து அவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் அரசு விதிமுறைகளின்படி நடத்த வேண்டும்,’’ என்றனர்.

Tags : supporters ,OPS , EPS-OPS supporters clash, tender issue
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது