×

சென்னை விமான நிலையத்தில் விஐபிக்கள் வரும் நுழைவாயிலில் 3 நாட்களாக நின்ற காரால் பீதி

சென்னை: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் வருகைப்பகுதியான தரைதளத்தில் 3வது, 4வது நுழைவாயில்கள் இடையே போர்டிகோ பகுதியில் கடந்த மூன்று தினங்களாக ஒரு வெள்ளை நிற கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. கார் நின்ற மூன்றாவது வாசல் முக்கியப் பிரமுகர்கள் வருகிற பகுதியாகும். அந்த காரில் இந்திய அரசு என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. எனவே, மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள் யாருடைய வருகைக்காகவோ இந்த கார் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று விமான நிலைய அதிகாரிகள் கருதினர். மேலும், அந்த கார் வழக்கமாக நிற்கும் திசையில் இல்லாமல் கார் எதிர் திசையில் நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அந்த கார் யாருடையது என்பதை அறிவதற்காக காரின் டயரை லாக் செய்தனர். ஆனால், மூன்று தினங்கள் ஆகியும் காரை எடுப்பதற்கு யாரும் வரவில்லை. இதனால், அந்த காரில் ஏதாவது வெடிகுண்டு இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதுபற்றி, விமான நிலைய மேலாளர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு சோதனை குழுவினருடன் வந்து காரை நேற்று பிற்பகல் முதலில் வெளிப்பக்கமாக சோதனையிட்டனர். பின்பு கார் கதவை உடைத்து உள்பகுதியிலும் தீவிர சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் ஒரு ஓரமாக நிறுத்தினர். காரை நிறுத்திவிட்டு அங்கும் காரின் டயர்களை லாக் செய்துள்ளனர். காரின் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அந்த கார் தாம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அதோடு, சிட்லபாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து அந்த கார் குறித்து விசாரிக்கின்றனர்.

Tags : VIPs ,airport ,Chennai , VIPs coming ,airport , Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்