×

பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொது பாதையை மூடிய அதிகாரிகள்

ஆலந்தூர்:    பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பரங்கிமலை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் மணலை கொட்டி மூடினர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ஆலந்தூர் நிதிப்பள்ளி, மற்றும் பரங்கிமலை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலைக்கு செல்ல ஒரு வழித்தடம் இருந்தது. பொதுமக்கள் இதனை பல ஆண்டுகளாக  பயன்படுத்தி வந்தனர். இந்த வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கடந்த ஆண்டு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அந்த வழித்தடத்தை மணலைக் கொட்டி மூடி விட்டனர். இதனால், நேற்று காலை பள்ளிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைக்கு   எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கறிஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து பரங்கிமலை உதவி கமிஷனர் சங்கரநாராயணன் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், சம்பந்தப்பட்ட மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் நேரில் வந்து பதில் கூறினால் தான் கலைந்து செல்வோம் என்று உறுதியாக இருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தா.மோ.அன்பரசன், ‘’சம்பவ இடத்துக்கு மாநகராட்சி அதிகாரியை வர சொல்லியிருக்கிறேன், அவர் வந்ததும் உங்கள் பிரச்சினை தீரும்’’ என்றார். இதனை அடுத்து அங்கு வந்த ஆலந்தூர் 12வது மண்டல உதவி மண்டல உதவி ஆணையர் முருகன் மெட்ரோ ரயில்வே அதிகாரிகளுடன் பேசி வழித்தடத்தில் உள்ள மணலை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரியிடம் பேசுவதாக உறுதியளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : station ,road ,Parangimalai , Officers closed, public road ,Parangimalai Metro station
× RELATED தாழம்பூர் காவல் நிலையம் அருகே சர்வீஸ்...