×

கடும் பனி மூட்டம் காரணமாக விபரீதம் ஓடுபாதை விட்டு விலகி சென்று புல் தரையில் இறங்கிய விமானம் : மயிரிழையில் 180 பயணிகள் உயர் தப்பினர்

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த ஒருவாரமாக பனி மூட்டம் அதிகமாக  காணப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம்  ஒன்று ஓடுதளத்தை விட்டு விலகி சென்று புல் தரையில் இறங்கியது. இதில் 180  பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். பெங்களூரு நகரம் மற்றும் ஊரக  மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக கடுமையான பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில்  கடந்த 11ம் தேதி நாக்பூரில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட கோ-ஏர்  நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், காலை 7.35 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா  சர்வதேச விமான நிலையம் வந்திறங்க வேண்டும். அன்று காலை கடுமையான பனி  இருந்ததின் காரணமாக தரையிறங்க முடியாமல் சில நிமிடம் வானில்  பறந்துகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டு அறையில் இருந்து  சிக்னல் கிளியரன்ஸ் கிடைத்ததால், விமானம் தரையிறக்கப்பட்டது. ஆனால்  குறிப்பிட்ட இடத்தில் இறங்காமல் ஓடுதளத்தில் தாறுமாறாக ஓடிய விமானம், புல்  தரையை உரசிக் கொண்டு சென்றது. உடனே சுதாரித்துக் கொண்ட விமானி, உடனடியாக   டேக்அப் செய்து மீண்டும் வானில் பறந்தார். தொடர்ந்து பனி  இருந்ததின் காரணமாக கோ-ஏர் விமானம் ஐதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பி  அனுப்பப்பட்டது. விமானம் அங்கு தரையிறங்கியதும், அதன் சக்கரத்தில் மண்  மற்றும் புற்கள் இருந்ததை கவனித்த பொறியாளர்கள் உடனடியாக மேலதிகாரிகளின்  கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதிகாரிகள் விமானியிடம் விசாரித்தபோது,  நடந்த உண்மையை கூறியுள்ளார்.

விமானியின் சாமர்த்தியத்தால் 180  பயணிகளின் உயி்ர் காப்பாற்றப்பட்டிருந்தாலும் நடந்த விவரத்தை சொல்லாமல்  மறைத்தது தொடர்பாக உயர்நிலை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  அந்த விமானம் புறப்பட்டது முதல் தரையிறங்கியது வரை கட்டுப்பாட்டு அறையுடன் விமானி கொண்டிருந்த தொடர்பு உள்பட பல விவரங்களை சேகரித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மத்திய விமான இயக்குனரக (டிஜிசிஏ) அதிகாரிகள் விரைவில்  விசாரிக்க உள்ளனர். அவர்கள் விசாரணை முடிக்கும் வரை விமானிக்கு பணி  எதுவும் ஒதுக்கீடு செய்யாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்க  உத்தரவிடப்பட்டுள்ளது. தாமதமாக வந்துள்ள தகவல் விமான நிலைய வளாகத்தில்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் கோ-ஏர் விமான நிறுவனம் இதுவரை  எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Airliner ,runway ,passengers , 180 passengers escaped, labyrinthine plane
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...