ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் அரை இறுதிக்கு முன்னேறினார் பெடரர் : ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்திய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் அரை இறுதிக்கு முன்னேறினார். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் களமிறங்கி உள்ளனர். ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜான் போர்க் பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஜர் பெடரர் (3வது ரேங்க்) தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். எனினும், 2வது லீக் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை (8வது ரேங்க்) வீழ்த்திய பெடரர் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜோகோவிச்சை எதிர்கொண்ட பெடரர் அதிரடியாக விளையாடி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த 4 ஆண்டுகளில் அவர் முதல் முறையாக ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடால் நம்பர் 1: இந்த தொடரில் வென்று ஆண்டு இறுதி தரவரிசையில் 6வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்புடன் இருந்த ஜோகோவிச், இந்த தோல்வியால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். இதையடுத்து, ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 5வது முறையாக ஆண்டு இறுதி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை உறுதி செய்து ஜோகோவிச், பெடரர், ஜிம்மி கானார்ஸ் (அமெரிக்கா) ஆகியோருடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டார். அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் 6 முறை  இந்த சாதனையை நிகழ்த்தி முதலிடம் வகிக்கிறார்.

Related Stories:

>