×

தீவிரவாதத்தின் மரபணு பாகிஸ்தானில் உள்ளது : யுனஸ்கோ கூட்டத்தில் இந்தியா தாக்கு

பாரீஸ்: ‘பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் மரபணுவாக பாகிஸ்தான் உள்ளது,’ என யுனஸ்கோ மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு யுனஸ்கோ. இந்த அமைப்பில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. யுனஸ்கோவின் பொதுக் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று நடந்தது. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட குழுவுக்கு அனன்யா அகர்வால் என்ற அதிகாரி தலைமை தாங்கினார். ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டதால் ஆவேசம் அடைந்த பாகிஸ்தான், சர்வதேச அரங்குகளில், இந்தியா மீது குற்றம் சாட்டி வந்தது. மேலும், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட்டால், அதன் பாதிப்புகள் இரு நாடுகளின் எல்லையை கடந்து செல்லும்’ என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யுனஸ்கோ கருத்தரங்கில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட அனன்யா அகர்வால் பேசியதாவது:

தீவிரவாதத்தின் மரபணு (டிஎன்ஏ) பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால், அது அனைத்திலும் தோல்வியடைந்த நாடாக உள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற அனைத்து விதமான எதிர்மறையான விஷயங்களின் இருப்பிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா மீது விஷத்தை உமிழ யுனஸ்கோ அரங்கத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்தாண்டில், நிலைகுலைந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 14வது இடத்தில் இருந்தது.
ஐ.நா அரங்கத்திலும், அணுஆயுத போர் குறித்து பிரசாரம் செய்யும் தலைவர் உள்ள நாடு பாகிஸ்தான். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒசாமா பின்லேடன், ஹக்கானி போன்ற தீவிரவாத தலைவர்கள்தான்  பாகிஸ்தானின் கதாநாயகர்கள் என்றார்.

1947ம் ஆண்டில் பகிஸ்தான் மக்கள் தொகையில் சிறுபான்மையினர் 23 சதவீதமாக இருந்தனர். தற்போது, அது 3 சதவீதமாக குறைந்துள்ளது. கிறிஸ்தவர்கள், சீக்கியர், அகமதியர்கள், இந்துக்கள், ஷியாக்கள், பாஸ்தூன்ஸ், சிந்தி இனத்தவர், பலூச்சி இனத்தவர்கள் எல்லாம் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கவுரவ கொலை, ஆசிட் தாக்குதல், கட்டாய திருமணம், குழந்தைகள் திருமணம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் பாகிஸ்தானில் இன்று பெரும் பிரச்னையாக உள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து, பாகிஸ்தான் கூறும் பொய்களை இந்தியா வன்மையாக மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐநா வளர்ச்சி பணிக்கு 13.5 மில்லியன் டாலர் நிதி

ஐநா அமைப்புக்கான இந்திய தூதரக அதிகாரியான அஞ்சனி குமார், ஐநா பொதுக் கூட்டத்தில் நேற்று பேசுகையில், ‘‘அடுத்தாண்டு ஐ.நா மேற்கொள்ளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு 13.5 மில்லியன் டாலர் தருவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது. இதில் உலக உணவு திட்டத்துக்கு 1.92 மில்லியன டாலர், குழந்தைகள் நிதிக்கு 9,00,000 அமெரிக்க டாலர், நிவாரண நிதிக்கு 5 மில்லியன் டாலர், மக்கள் தொகை கட்டுப்பாடு நிதிக்கு 5,00,000 டாலர், தன்னார்வ நிதிக்கு 200 000 டாலர், குடி அமர்வு திட்டத்துக்கு 1,50,000 டாலர் நிதி, தொழில்நுட்ப உதவிக்கு 1,00,000 டாலர் ஆகியவை வழங்கப்படும்,’’ என்றார்.

அமைதி பணியில் சமரசம் கூடாது

உள்நாட்டு கலவரம் நடக்கும் நாடுகளில் ஐநா, தனது அமைதிப்படைகளை அனுப்பி வருகிறது. இந்த அமைதிப்பணி நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் ஐ.நா தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர குழுவில் ராணுவ ஆலோசகராக இருக்கும் கர்னல் சந்தீப் கபூர் பேசினார். அவர் கூறுகையில், ‘‘செலவினங்களை குறைப்பதற்காக, அமைதிப் பணி நடவடிக்கைகளில் சமரசம் செய்து கொள்வது கவலை அளிக்கிறது. இது அமைதிப்படை வீரர்களின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, புதிய படைகள் வந்ததும், ஏற்கனவே பணியில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றக் கூடாது. புதிய வீரர்கள் நிலவரத்தை புரிந்து கொண்டபின், ஏற்கனவே உள்ளவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். அமைதிப்படை விதிமுறைகளில் சமரசம் கூடாது,’’ என்றார்.

Tags : Pakistan ,attack ,India ,UNESCO , Gene of terrorism , Pakistan
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!