×

உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான சாலை மறியலில் மதிமுக பங்கேற்கும்: வைகோ அறிவிப்பு

சென்னை: உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான சாலை மறியல் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், நவம்பர் 18ம் தேதி அன்று 13 மாவட்டங்களில், 50 இடங்களில் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் கொங்கு மண்டலத்தின் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்து, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். சாலை ஓரமாக மத்திய - மாநில அரசுகள் கேபிள்கள் அமைத்து மின் கடவுத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக புதைவடங்கள் (கேபிள்கள்) அமைக்க வேண்டும் என்று விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

புதைவடமாக இல்லாவிட்டாலும், புதிய நில எடுப்புச் சட்டம் 2013ன்படி ஒட்டுமொத்த நிலத்தின் மதிப்பில் சந்தை விலையை நிர்ணயித்து, அதில் நான்கு மடங்கு வழங்கிட வழிவகை செய்வதை விட்டுவிட்டு, புதிய புதிய அரசாணைகளை வெளியிட்டு, விவசாயிகளை ஏமாற்றி வருவது ஏற்புடையது அல்ல. உயர் மின்பாதை செல்லும் இடத்திற்கு மாத வாடகை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். வருவாய் துறையினரை வைத்து மிரட்டி, அச்சுறுத்தி திட்டப் பணிகளை அரசு நிறைவேற்றி வருகிறது. எதிர்த்துப் போராடினால் காவல்துறையினரை கொண்டு வழக்குப் பதிவு செய்கிறது. ‘விவசாயி மகன்’ என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி அரசு, போராடும் விவசாயிகளை விலங்கிட்டுச் சிறையில் அடைக்கிறது.
அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நவம்பர் 18ம் தேதி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல், திருச்சி என 13 மாவட்டங்களில், 50 இடங்களில் விவசாய சங்கக் கூட்டியக்கத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள சாலை மறியல் போராட்டத்தில், விவசாய சங்கத்தினருடன் இணைந்து மதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : announcement ,Vigo ,Mathimukha ,towers , High power towers, road pickers, Vigo
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்