×

எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க திமுக தயார் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி திட்டம்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

சென்னை: உள்ளாட்சி ேதர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் சந்திக்க திமுக தயாராக உள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 128 மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும், ‘டேலி’ முடித்த 67 மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கிவாழ்த்து தெரிவித்தார். 3ம் தேதி நடந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்ட 40 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் மற்றும் புத்தாடைகளை வழங்கினார். தொடர்ந்து, வார்டு 69 சாந்தி நகரில் பழுதடைந்துள்ள சாலையைப் பார்வையிட்டார்.  அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மருத்துவப் படிப்பைக் காண வேண்டுமென்ற கனவு கண்டுகொண்டிருந்த அரியலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதா. அந்த கனவு பலிக்கவில்லை என்று மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டு, நீட் தேர்விற்கு எப்படியும் விலக்கு கிடைத்திட வேண்டும். இதுபோன்ற நிலைமை மற்ற மாணவிகளுக்கு வந்து விடக்கூடாது என்பதை அந்த மாணவி இன்றைக்கு நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய பெயரில்தான், கொளத்தூர் தொகுதியில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ என்ற ஒரு பயிற்சி மையத்தை தொடங்கி இருக்கிறோம். இங்கு இலவசமாக ‘டேலி’ பயிற்சி வழங்கப்படுவதுடன், டேலி தேர்வு எழுதுவதற்கான முழு கட்டணத்தையும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியே ஏற்றுக் கொள்கிறது. இந்த அகாடமியில், முதல் பேட்ச்சில் 61 பேர் பயிற்சி பெற்றார்கள். அந்த 61 பேரில் 59 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டாவது பேட்ச்சில் 67 பேர் பயிற்சி பெற்று அதில் 56 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இப்போது மூன்றாவது பேட்ச்சில் 50 மாணவிகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த பேட்ச்சிற்கும் வரவேண்டுமென்று மாணவிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்ற நிலை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உருவாக வேண்டும். சேகர்பாபு துறைமுகம் சட்டமன்ற தொகுதியில், தயாநிதி மாறன் எம்.பி. தொகுதியில் அந்த பணி தொடங்கப்பட இருக்கிறது. ஆகவே, இங்கே வந்துள்ள எம்எல்ஏக்களும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இல்லை; முறையாக நடத்த வேண்டும். ஒதுக்கீடுகள் முறையாக இல்லை, அதை சரி செய்யுங்கள் என்று கோரித்தான் நீதிமன்றத்துக்கு சென்றோம். திட்டமிட்டு நான்கு மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக புதிதாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 5000 வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எப்படி பிரித்து தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை நாங்கள் கேட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, ஏற்கனவே உயர் நீதிமன்றம் எந்தெந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளதோ, அந்த அடிப்படையில் நடத்தப்படுகிறதா என்பது குறித்து எங்கள் அமைப்புச் செயலாளர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தலை எப்படி நடத்தப்போகிறீர்கள் என்றுதான் கேட்டுள்ளார்.

சிசிடிவி கேமரா பொருத்துவீர்களா, ஒதுக்கீடு முறையாக செய்துள்ளீர்களா,  உயர் நீதின்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்போகிறீர்களா, மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அவற்றைச் சரிசெய்து தேர்தல் நடத்தப்போகிறீர்களா என்றுதான் கேட்டுள்ளோம். மற்றபடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், இன்றைக்கு இருக்கும் அதிமுக ஆட்சி ஈடுபட்டு கொண்டிருக்கிறதோ என்பதுதான் எங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம். நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பி.கே.சேகர்பாபு, ரங்கநாதன், மாதவரம் சுதர்சனம், கே.பி.பி.சாமி, கு.க.செல்வம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, ரவிச்சந்திரன், சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தேவ ஜவஹர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,election ,government ,elections ,MK Stalin DMK ,election government ,MK Stalin , Election, DMK, ruling party, MK Stalin
× RELATED மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி 28ல் ஆர்ப்பாட்டம்