×

ஐஐடியில் தற்கொலை விவகாரம் எடப்பாடி, மு.க.ஸ்டாலினுடன் மாணவியின் தந்தை சந்திப்பு

சென்னை: ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று முதல்வர் எடப்பாடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் அளித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நேற்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அப்துல் லத்தீப் கூறுகையில், ‘‘குற்றவாளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்றார். இதை தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அப்துல் லத்தீப் சந்தித்து பேசினார். மகள் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் இருந்தார். மு.க.ஸ்டாலினை சந்தித்து வெளியே வந்த அபுபக்கர் கூறும்போது, “மாணவி பாத்திமா தற்கொலை சம்பவம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் திமுக குரல் எழுப்பும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்” என்றார். ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நிருபர்களை சந்தித்து விரிவாக பேட்டி அளிக்க உள்ளதாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறினார்.

Tags : Student ,MK Stalin ,IIT Student ,IIT , IIT, Suicidal Affairs, Edappadi, MK Stalin, Father
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...