×

காட்பாடி அடுத்த சேனூரில் கைவிடப்பட்ட போர்வெல்கள்: பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

வேலூர்: காட்பாடி அடுத்த சேனூரில் கைவிடப்பட்ட போர்வெல்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்பாடி அடுத்த சேனூர் கிராமத்தில் மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சுமார் 5க்கும் மேற்பட்ட போர்வெல்கள் போதிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட போர்வெல்களை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சேனூர் கிராம மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்காங்கே போர்வெல்கள் போடப்பட்டு, கைப்பிடி பம்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து கைப்பிடி பம்புகளுக்கு பெயிண்ட் அடித்து பராமரிக்காததால், துருபிடித்து பாழடைந்துவிட்டது. இந்நிலையில், கைப்பிடி பம்புகள் முழுவதுமாக சேதமாகி போர்வெல்கள் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

மேலும் மக்கள் வரிப்பணம் பல லட்சம் வீணாகி வருகிறது. எனவே, சேனூர் ஊராட்சி பகுதியில் உள்ள போர்வெல்களை கணக்கெடுத்து மோட்டார் பொருத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’ என்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கைப்பிடி பம்புகளை பயன்படுத்திய காலங்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மோட்டார் பம்புகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பலர் தண்ணீரை விற்க தொடங்கிவிட்டனர். இதற்காக அளவுக்கு அதிக ஆழத்தில் போர்வெல்கள் போடப்படுகின்றன. குறிப்பிட்ட போர்வெல்லில் அதிகளவு தண்ணீர் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தண்ணீர் தீர்ந்துவிட்டால், அருகில் மற்றொரு போர்வெல்லை அமைத்து தண்ணீரை உறிஞ்சி விற்க தொடங்கிவிடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் பயன்பாடற்ற போர்வெல்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, எதற்காக போர்வெல்கள் போடப்படுகின்றன? அதிலிருந்து முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : borewells ,Katpadi ,Abandoned Borewells , Wildfire, borewells
× RELATED டாஸ்மாக் பார் அருகே பிளாக்கில் விற்க...