சென்னை: தனது மகள் பாத்திமா கொலை செய்யப்பட்டதாக தந்தை அப்துல் லத்தீப் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவி கொலை வழக்கில் விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வருவதாக டிஜிபி தெரிவித்ததாகவும், பேராசிரியர் சுதர்சனை கைது செய்ய டிஜிபியிடம் தாம் கோரிக்கை விடுத்ததாகவும் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்தார். என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார்.
இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவத்தை பார்க்கும் போது தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தெளிவாக தெரிகிறது. மேலும் திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. படிப்பில் கெட்டிக்காரராக திகழ்ந்த தனது மகள் மிகவும் மன தைரியம் கொண்டவர். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது மகள் பாத்திமா கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தனது மகள் பாத்திமா மரணத்துக்கு ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என அவர் கூறியுள்ளார். தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் பாத்திமா, கேண்டீனில் ஒரு மணி நேரம் அழுது இருக்கிறார். சதர்சன் பத்மநாபன் என்ற பேராசிரியர் தன்னை மிரட்டியதாக மகள் பாத்திமா குற்றம் சாட்டியிருந்தார். தன் மகளுக்கு ஏற்பட்ட கொடுமை இனி வேறு எந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. ஐஐடியில் தான் துன்புறுத்தப்பட்டதாக ஏற்கனவே தன் மகள் கூறியிருந்தார். சுதர்சன் பத்மநாபன் ஏமாற்று பேர்வழி என்று தன்னிடம் மகள் கூறியிருந்தார். தொடர்ந்து பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வருடன் பாத்திமா தந்தை சந்திப்பு:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். குற்றவாளி கைது செய்யப்படுவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தமிழக ஆளுநரையும் சந்தித்து புகார் அளிக்க போவதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடியை மீண்டும் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.