×

ஆபரண ஏற்றுமதி அக்டோபரில் சரிவு

புதுடெல்லி: ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 5.49 சதவீதம் சரிந்துள்ளதாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுபோல் வைர ஏற்றுமதியும் சரிந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் ஆபரண ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்ததால் உள்நாட்டிலும் ஆபரண தேவை குறைந்ததால் தங்கம் இறக்குமதி சரிவை சந்தித்தது. இதையடுத்து, ஆபரண ஏற்றுமதியும் சரிந்துள்ளது. கடந்த அக்டோபரில் 24,583.19 கோடி மதிப்பிலான ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் 26,010.87 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.49 சதவீதம் சரிந்துள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கூறியுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஆபரண ஏற்றுமதி 1,57,326.03 கோடி. இது முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1,65,845.63 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 5.14 சதவீதம் சரிந்துள்ளது. இதுபோல் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி கடந்த மாதத்தில் 18.35 சரிந்து 13,875.19 கோடியாக இருந்தது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் இது வைர ஏற்றுமதி 17.42 சதவீதம் சரிந்து 85,931.99 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது 1,04,062.15 கோடியாக இருந்தது. 


Tags : Jewelry exports, decline in October
× RELATED 2025ம் ஆண்டுக்குள் உலகளாவிய வர்த்தக...