×

ரபேல் வழக்கு தீர்ப்பு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : பாஜ தலைவர் அமித்ஷா வலியுறுத்தல்

புதுடெல்லி : ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டு நலனை விட அரசியலே முக்கியம் என்று கருதிய காங்கிரஸ் மற்றும்  அதன் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று பாஜ தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வலியுறுத்தி  உள்ளார். ரபேல் வழக்கில், நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முந்தைய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. மேலும், தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதுகுறித்து பாஜ தலைவர் அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘ரபேல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அடிப்படை ஆதாரமில்லாமல், கெட்ட எண்ணத்துடன் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் செய்த தவறான தேர்தல் பிரசாரத்துக்கு கிடைத்த சரியான பதிலடி.

ரபேல் தொடர்பாக, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கியது மோசமானது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நாட்டு நலனை விட அரசியல் செய்வதே முக்கியம் என்று கருதிய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், இறுதியில் வாய்மையே வென்றது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தேசத்தை தவறாக வழி நடத்தி செல்ல முயற்சித்த ராகுல் காந்தி, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Amit Shah ,Rahul ,Rafael ,BJP , Rafael case, Rahul ,apologize, BJP leader Amit Shah insists
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...