×

போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை ரபேல் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய விமானப் படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை 56 ஆயிரம் கோடிக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில், ‘ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை. இந்த ஒப்பந்தம் பற்றி சிபிஐ விசாரிக்கவோ, நீதிமன்ற கண்காணிப்பில் தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்தவோ வேண்டிய அவசியம் கிடையாது. மேலும், விமானங்களை கொள்முதல் செய்வது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை,’ என கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, யஷ்வந்த் சின்கா ஆகியோர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. அதில், ‘ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. இது குறித்து மத்திய அரசு தரப்பில் சீலிடப்பட்ட கவரில்  எழுத்துப்பூர்வமான விளக்கம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் வழங்கிய முந்தைய தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்கிறது. சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,’ என உத்தரவிட்டது.

கவனத்துடன் பேச வேண்டும் ராகுல் காந்திக்கு கண்டிப்பு

‘ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என கூறிவிட்டது’ கடந்த மக்களவை தேர்தலின்போது அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். இதற்கு எதிராக பாஜ எம்பி மீனாட்சி லேகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், “இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி பல இடங்களில் தனது விமர்சன பேச்சுக்களை முன்வைத்துள்ளார். இதனை நீதிமன்றமும் கண்கானித்துள்ளது. இருப்பினும், அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. ராகுல் காந்தி இனி வருங்காலங்களில் கூடுதல் கவனமுடன் பேச வேண்டும்,’ என்று கண்டித்து, நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

கொள்முதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பிஎஸ் தனோவா கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பாதுகாப்புத் துறைக்கு இது சாதகமான தீர்ப்பும் கூட. ரபேல் விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு சரியானது  என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ரபேல் தொடர்பான முரண்பட்ட கருத்துக்கள் இந்த தீர்ப்பின் மூலம் புதைக்கப்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இதே தீர்ப்பை கடந்த 2018ல் நான் தெரிவித்தேன். இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.

Tags : Rafael ,Supreme Court , Rafael suspended, petitions dismissed, Supreme Court ruling
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...