×

தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் 350 கோடி முறைகேடா?: தமிழக காவல்துறை விளக்கம்

சென்னை: தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் உபகரணங்கள் வாங்கியதில் ரூ.350 கோடி முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை நேற்று விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து தமிழக காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபி ேநற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கான டிஜிட்டல் மொபைல் ரேடியோ திட்டங்களின் டெண்டர்கள் நடைமுறைகளை மீறி வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று பத்திரிகைகளில்

கூறப்பட்டுள்ளது. இதற்கான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது எனவும் செய்திகள் வந்துள்ளது. பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டியபடி ஆப்கோ மற்றும் டிஎம்ஆர் திட்டங்களில் ரூ.350 கோடி முறைகேடுகள் நடந்துள்ளன என்பது சரியானதல்ல என்று தெளிவுப்படுத்தப்படுகிறது. இரண்டு நகரங்களில் ரூ.86.57 கோடிக்கு ஆப்கோ திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இத்திட்டம் வி லிங்க் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படவில்லை. 10 மாவட்டங்களுக்கான டிஎம்ஆர் திட்டங்கள் மொத்தம் ரூ.57.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


அவற்றில் ரூ.3.49 கோடி மதிப்புள்ள ஒரு மாவட்டத்திற்கான டெண்டர் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கான டிஎம்ஆர் திட்டங்களின் டெண்டர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. டிஎம்ஆர் மற்றும் ஆப்கோ திட்டங்களில் எந்த ஒரு ஒப்பந்ததாரருக்கும் இதுவரை எந்த தொகையும் வழங்கப்படவில்லை.தொழில்நுட்ப பிரிவின் மூத்த அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவின் சில அலுவலர்கள், நடைமுறை தவறுகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக காவல் துறை இயக்குநர் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகம் முதல்வர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Tags : Tamilnadu , irregularities, technology ,procurement, Tamilnadu
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு