×

மூன்று ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழகத்துக்கு25 ஆயிரம் கோடி நிதி இழப்பு

* 12,524 கிராமங்களில் அடிப்படை வசதி  அடியோடு ’காலி’
* சுப்ரீம் கோர்ட் ‘குட்டு’ வைத்ததால் தேர்தல் நடவடிக்கை

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உதவியில் ரூ.25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் 12,524 கிராமங்களில் எந்த பணிகளும் நடக்காததால் அடிப்படை வசதிகள் அத்தனையும் காலியாகி விட்டன. தற்போது கூட சுப்ரீம் கோர்ட் கடுமையாக குட்டு வைத்ததால், வேறு வழியின்றி தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்தமுறை பதவி வகித்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016, அக்டோபர் 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதற்கு முன்னரே உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முறைப்படி அடுத்த பிரதிநிதிகளை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அரசியல் சூழல் அதிமுகவிற்கு சாதகமாக இல்லாததால் தமிழக அரசு தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே, மத்திய அரசு கிராம ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கும். சிறப்பு அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் இருக்கும்போது மத்திய அரசு வழங்கும் நிதி உதவியை பெருமளவு குறைத்துக் கொள்ளும். இந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு

கிடைக்க வேண்டிய ரூ.25 ஆயிரம் கோடி நிதி உதவி கிடைக்கவில்லை என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பகிரங்கமாகவே புகார் எழுப்பி உள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் 365 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 12,524 கிராம ஊராட்சிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி உதவி இல்லாமல் எந்த வளர்ச்சிப்பணிகளும் நடக்கவில்லை. தவிர 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியமும் முறையாக வழங்கப்படவில்லை. காலம் தாழ்த்தி வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்திலும் மின்கட்டணம், குடிநீர் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை பிடித்துக் கொள்வதால் பல நூறு கிராம ஊராட்சிகளுக்கு நிதியே போய் சேராது.

‘சைபர்’ ஊராட்சி : இதற்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ‘சைபர் ஊராட்சிகள்’ என பெயர் வைத்துள்ளனர். இப்படி நிதி வசதி இல்லாமல் தள்ளாடும்போது எங்கிருந்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய முடியும்? மாநிலம் முழுவதும் எந்த கிராம ஊராட்சியிலும் முழுமையாக கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, விளையாட்டு திடல் வசதி, நூலக வசதிகள், ரோடு மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் டெங்கு, மர்ம காய்ச்சல் அதிகரித்து விட்டது.  குடிநீருக்கு பல நூறு கோடி பணம் ஒதுக்குவதாக தகவல்கள் மட்டுமே வெளியாகும். அந்த பணம் எப்படி செலவிடப்பட்டது என்பது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும். ஆனால் எந்த கிராமத்திலும் குடிநீர் வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக பிரதமர் மோடி அதிகளவில் ஆர்வம் காட்டும் தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தமிழக கிராமங்களில் பெருமளவு செயல்படவே இல்லை. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. வேலை செய்தவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என பல கிராமங்களில் மக்கள் போராடி வருகின்றனர்.   இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், நீதிபதிகள் தமிழக அரசை கடுமையாக கண்டித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு அரைகுறை மனதோடு தொடங்கி உள்ளது.ஓட்டுச்சீட்டு முறை : மாநிலம் முழுவதும் மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கவுன்சிலர் மற்றும் தலைவர் பதவிக்கு நேரடியாக தேர்தல்கள் நடக்கின்றன. இப்பகுதிகளில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே பதிவாவதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி கவுன்சிலர், கிராம ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என நான்கு பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடப்பதால், கிராமங்களில் மட்டும் பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான வார்டு வரையரை பணிகள் முடிந்து விட்டன. வார்டு வரையரைப்படி வாக்காளர் பட்டியலும் தயாராகி விட்டது. ஒவ்வொரு வார்டுகள், கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்திற்கும் சுழற்சி முறைப்படி ‘ரிசர்வேசன்’ பட்டியலும் தயாராகி விட்டது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் தேர்தல் பிரிவுகள் தொடங்கப்பட்டு விட்டன. ஓட்டுச்சாவடிகள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, மின்சாரம், சாய்வு தளம், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு விட்டன. இந்த விவரங்களும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் நாங்கள் வேட்பு மனு வாங்க தயாராகி விட்டோம். அந்த அளவு தேவையான ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் அரசுதான் தமிழக தேர்தல் ஆணையத்திடம் பேசி, தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.சுப்ரீம் கோர்ட் நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியின்றி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.



Tags : Tamil Nadu ,elections , holding, local ,elections, Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...