×

கோவை அருகே நள்ளிரவில் பயங்கரம் தண்டவாளத்தில் மது அருந்திய 4 மாணவர்கள் ரயில் மோதி பலி: மிதமிஞ்சிய போதையால் உயிரை இழந்தனர்

கோவை: கோவை அருகே நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தபோது ரயில் மோதி இன்ஜியரிங் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். ஒரு மாணவர் லேசான காயத்துடன் தப்பினார். மிதமிஞ்சிய போதையால் ரயில் வரும் சத்தம் கேட்காமல் உயிரை பறிகொடுத்துள்ளனர்.கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22640) நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு கோவை நிலையம் வந்தது. 10.25 மணிக்கு மீண்டும் சென்னை புறப்பட்டு சென்றது. இரவு 11.30 மணியளவில் சூலூர் அடுத்த ராவத்தூர் பாலம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் நடுவே 5 பேர் அமர்ந்திருந்ததை பார்த்த இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். ஆனால் அவர்கள் விலகிச் செல்லவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் 5 பேர் மீதும் மோதி தூக்கி வீசியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார். போலீசார் சென்று 4 பேரின் உடலையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விசாரணையில், கொடைக்கானலை சேர்ந்த சித்திக்ராஜா (22), நிலக்கோட்டையை சேர்ந்த ராஜசேகர் (22), ராஜபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (22), கவுதம் (22) என்பதும், காயம் அடைந்தது தேனியை சேர்ந்த விஷ்வனேஷ் என்பதும் தெரியவந்தது. சித்திக்ராஜா, விஷ்வனேஷ் ஆகியோர் சூலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4ம் ஆண்டும், ராஜசேகர் அதே கல்லூரியில் 3ம் ஆண்டும் படித்துள்ளனர். கருப்புசாமி, கவுதம் ஆகியோர் பி.இ. படித்து முடித்து விட்டு அரியர் தேர்வு எழுத வந்துள்ளனர். இதற்காக இருவரும் ராவத்தூர் பிரிவு அருகே சித்திக்ராஜாவின் விடுதியில் நேற்று முன்தினம் மதியம் வந்து தங்கினர். பின்னர், தேர்வு எழுதிய சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக மாலையில் அங்கு 5 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை ஏறாததால் இரவில் 5 பேரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினர்.
பார் மூடிவிட்டதால் மதுபாட்டிலுடன் அருகிலுள்ள தண்டவாள பகுதிக்கு சென்று அதில் அமர்ந்து மது குடித்துள்ளனர். மிதமிஞ்சிய போதையில் இருந்ததால் அவர்களுக்கு ரயில் வருவது தெரியவில்லை. இதனாலேயே அவர்கள் ரயில் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. பலியான மாணவர்கள் பற்றி அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேற்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து மகன்களின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர், 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுவால் மரணத்தை தேடிகொண்டனர்: முன்னதாக சம்பவ இடத்தை ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. மகேஷ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ஒரு லட்சம் விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த ராவத்தூர் பாலம் அருகே 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்லும். ஒரு இரவில் 70 ரயில்கள் அந்த இடத்தை கடக்கும். 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் அந்த இடத்தை கடந்து செல்லும். மதுவால் மாணவர்களே மரணத்தை தேடிக் கொண்டனர்’’ என்றார்.

பக்கத்து தண்டவாளத்தில் ரயில்...
பலியான மாணவர்கள் 5 பேரும் முதலில் சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக வரும் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அங்கு ஒரு ரயில் வந்ததால், கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் தண்டவாளத்தில்

மாறி அமர்ந்து மது குடித்தனர். ரயில் ஹாரன் சத்தம் கேட்டபோது, போதையில் அருகில் உள்ள தண்டவாளத்தில்தான் ரயில் வருகிறது என்று நினைத்ததே 4 பேரின் பலிக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

5 மணி நேரம் கழித்தே தகவல் வந்தது
சம்பவ இடத்தில் மூடி திறக்கப்படாத மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், டம்ளர்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் கிடந்தன. இதை, போலீசார் கைப்பற்றினர். மாணவர்கள் பலியானது நள்ளிரவு 1.20 மணி. ஆனால், அதிகாலை 6.30

மணிக்குத்தான் போலீசுக்கு தகவல் தெரியவந்தது. 5 மணி நேரம் அனாதை சடலங்களாக கிடந்துள்ளன.

நிலா வெளிச்சத்தில் நடந்த மது விருந்துவிபத்தில் சிக்கிய மாணவர்கள்
உயிர் தப்பிய மாணவன் விஷ்வனேஷ் (22) கூறியதாவது: அரியர் தேர்வு எழுத வந்த கருப்பசாமியும், கவுதமும் 3 நாட்கள் எனது அறையில் தங்கி படித்தனர். தேர்வு முடிந்ததும் மது குடிக்க வேண்டும் என இருவரும் கூறினர். அதனால் இரவு 8.30 மணி அளவில் நாங்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்தினோம். அதில், 2 பேர் மட்டும் போதை ஏறவில்லை என்றதால் மீண்டும் 5 பேரும் ராவத்தூர் பிரிவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று 3 குவார்ட்டர் பாட்டில் வாங்கினோம். அறைக்கு சென்று குடிக்கலாம் என திட்டமிட்டபோது,

நண்பரில் ஒருவர், ‘‘நிலா வெளிச்சத்தில் மது குடிக்கலாம்’’ என கூறினார். இதைத்தொடர்ந்து 4 பேரும் தண்டவாளத்தின் நடுவில் அமர்ந்து மது குடித்தனர். நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது தூரத்தில் ரயில் வரும் வெளிச்சம் தெரிந்தது. ஹாரன் அடிக்கும் சத்தமும் கேட்டது. நான் உடனே அவர்களை எழும்ப சொல்லி கத்தினேன். ஆனால் அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் ரயில் மிக அருகில் வந்துவிட்டது. உடனே நான் எட்டி குதித்து தப்பினேன். இவ்வாறு அழுதபடி கூறினார்.

Tags : train crash ,raids ,Kovil Train ,Terror ,Coimbatore , Terror ,Coimbatore, Drinking wine ,train collision
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...