×

விலை தொடர்ந்து அதிகரிப்பால் வெங்காயம் விலை கிலோ 100ஐ நெருங்குகிறது

* பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை
* ஓட்டலில் வெங்காய சட்னி திடீர் நிறுத்தம்

சென்னை: விலை தொடர்ந்து அதிகரிப்பால் வெங்காயம் விலை கிலோ 100ஐ தொட உள்ளது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். வெங்காயம் விலை உயர்வால் ஓட்டல்களில் வெங்காய சட்னி

திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய மார்க்கெட்டான கோயம்பேட்டுக்கு தினமும் 80 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கமாக இருந்து வந்தது. இதில் 80 சதவீதம் வெங்காயம் மகாராஷ்டிராவிலும், மீதியுள்ள 20 சதவீதம் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் வந்தது. ஆனால், 20 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் இந்தாண்டு மழை கொட்டி தீர்த்துள்ளது. அதே போல கர்நாடகா, ஆந்திராவிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், வெங்காயம் விளைச்சல் 3 மாநிலங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கான வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

எதிர்பாராத இந்த காரணத்தால் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. சில சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் கிலோ 95 முதல் 130 வரை விற்கப்படுகிறது. இது குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது: எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்துள்ளது. முன்னர் எல்லாம் ஒரு மாநிலத்தில் மழை பெய்தால், மீதியுள்ள 2 மாநிலங்களில் இருந்து வரும் வெங்காயம் தேவையை பூர்த்தி செய்து விடும். ஆனால், இந்த ஆண்டு ஒரே நேரத்தில் 3 மாநிலத்திலும் மழை பெய்துள்ளது. இதனால், வெங்காயம் விளைச்சல் என்பது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது ெவறும் 40 முதல் 50 லாரிகளில் தான் வெங்காயம் வருகிறது. இதனால், வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. பல்லாரி வெங்காயம் கடந்த மாதம் கிலோ 20 முதல் 30 வரை விற்கப்பட்டது. இது தற்ேபாது 50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ₹30 முதல் ₹40 வரை விற்கப்பட்டது. இது தற்போது ₹50, ₹60 என்று விற்கப்படுகிறது. இது மொத்த மார்க்கெட்டின் விலை தான். சில்லரை விலையில் விலை என்பது இன்னும் மாறுபடும். வெங்காயம் விலை அதிகமாக உள்ளதால் மக்கள் வெங்காயத்தை வாங்க பயப்படுகின்றனர். இந்தாண்டு இறுதி வரை வெங்காயம் விலை உச்சத்தில் தான் இருக்கும். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு புதிய வரத்து வெங்காயம் வந்த பிறகு தான் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மொத்த மார்க்கெட்டில் தான் வெங்காயம் 60க்கு விற்கப்படுகிறது. இது சில்லரை மார்க்கெட்டில் இன்னும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது கிலோ 90 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் வரத்து குறைந்தால் இந்த வாரத்திற்குள் கிலோ 100 நெருங்க வாய்ப்புள்ளதாக சில்லரை வியாபாரிகள் கூறியுள்ளனர்.வெங்காயம் விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருப்பதால் ஓட்டல்களிலும் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்கு வெங்காய சட்னி, தேங்காய் சட்னி வழங்கப்படுவது வழக்கம். விலை உயர்வால் வெங்காய சட்னி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.



Tags : continue , increase, onions, 100 kg
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...