×

‘போலி நகைகள் விற்பதாக அசிங்கப்படுத்துவோம்’1 கோடி கேட்டு துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளருக்கு மிரட்டல்

* போலி நிருபர் உட்பட 10 பேர் கைது *  2 துப்பாக்கிகள், கத்தி, 1 லட்சம் பணம் பறிமுதல்
* முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்து சென்னையில் கைவரிசை காட்டியது அம்பலம்

சென்னை: போலி நகைகள் விற்பதாக அசிங்கப்படுத்திவிடுவோம் என்று கூறி பிரபல நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் 1 கோடி கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக போலி நிருபர் உட்பட

10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, 1 லட்சம் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை திருவேற்காடு, சுந்தரா சோழவரம் எழுமலை நகரை சேர்ந்தவர் தனசேகர்(27). இவர் கடந்த 3ம் தேதி தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் தன்னிடம் இருந்த பழைய தங்க நாணயம் கொடுத்து 3 சவரன் செயின் வாங்கி உள்ளார். அப்போது செயினில் மாவு போன்று ரசாயனத்தை தடவி இது போலியான நகை போல் இருக்கிறது என்று கடை ஊழியர்களிடம் தனசேகர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் கடையில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு நகைகடையின் உரிமையாளர் சிவ அருள்துரை நகை வாங்கிய தனசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தனசேகர் நான் ‘யூனிவர்செல் பிரஸ் மீடியா’ துணை தலைவராக இருக்கிறேன். உங்கள் கடையில் போலியான நகை விற்பதாக விளம்பரப்படுத்தி அசிங்கப்படுத்தி விடுவோம். அதோடு உங்கள் கடையில் யாரும் நகை வாங்க மாட்டார்கள் என்று மிரட்டியுள்ளார்.

 பிரச்னையின் போது நகைக்கடையில் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததால் உரிமையாளர் சிவ அருள்துரை அதிர்ச்சியடைந்தார். உடனே தனசேகர் பணம் கொடுத்தால் நான் இங்கிருந்து சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். வேறு வழியின்றி வியாபாரம் நடக்கும் நேரத்தில் பிரச்னை வேண்டாம் என்று உரிமையாளர் சிவ அருள்துரை 15 லட்சம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.இந்நிலையில், தனசேகர் சினிமா பாணியில், தமக்கு ஒரு அடிமை சிக்கியுள்ளான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். பிறகு தனசேகர் தனது நண்பர்கள் 15 பேருடன் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அதே நகைக்கடைக்கு இரண்டு கார்களில் சென்றுள்ளார். கடையில் உரிமையாளர் சிவஅருள்துரை அறைக்கு சென்ற 15 பேரும், எங்களுக்கு ₹15 லட்சம் பணம் போதாது, ₹1 கோடி பணம் வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு உரிமையாளர் 1 கோடி பணம் எல்லாம் தரமுடியாது. அன்று அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருந்ததால் 15 லட்சம் பணம் தரவேண்டிய நிலை இருந்தது. நல்ல நகையை போலி நகை என்று திட்டமிட்டு என்னிடம் 15 லட்சம் பணத்தை ஏமாற்றி வாங்கி சென்று விட்டீர்கள். இனி என்னிடம் ஒரு பைசா கூட உங்களால் வாங்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தனசேகர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்ட தொடங்கினர். அப்போது சாதுரியமாக செயல்பட்ட உரிமையாளர் சிவஅருள்துரை, தனது கண் அசைவால் ஊழியர்களிடம் போலீசுக்கு தகவல் கொடுக்கும் படி கூறினார். அதன்படி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அடுத்து சில நிமிடங்களில் தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமாரின் தனிப்படை நகைக்கடைக்கு வந்தனர். இதை பார்த்த தனசேகர் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் ஊழியர்கள் சுற்றி வளைத்து தனசேகர் உட்பட 10 பேரை மடக்கி பிடித்தனர். 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.பிடிபட்ட 10 பேரையும் தனிப்படையினர் மாம்பலம் காவல்நிலையத்திற்கு அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அப்போது, தனசேகர் போலி நிருபர் என்றும், இவரிடம் போலி சப்-இன்ஸ்பெக்டருக்கான அடையாள அட்டை மற்றும் பல்வேறு பத்திரிகை நிறுவனங்களின் போலி அடையாள அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக தனது நண்பர்களான புதுப்பேட்டையை ேசர்ந்த சையத் அபுதாகிர்(49), எண்ணூர் சிவகாமி நகரை சேர்ந்த ஜெகதீசன்(25), புதுப்பேட்ைடயை ேசர்ந்த அமனுல்லா(39), கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியை ேசர்ந்த ராம்(27), கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த முருகன்(40), வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா(47), திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெருவை ேசர்ந்த திருமால்(37), பல்லாவரத்தை சேர்ந்த தண்டபாணி(24), திருவல்லிக்கேணி நடேசன் தெருவை ேசர்ந்த வெங்கடேசன்(44) ஆகியோர் என தெரியவந்தது.

 அனைவரிடமும் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது, இதே போல் தனசேகர் முதல்வர் மற்றும் துணை முதல்வர்களுடன்  ஒன்றாக இருப்பது போல் புகைப்படத்தை வைத்து கொண்டு, தி.நகர் உட்பட சென்னை முழுவதும் நகைக்கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் நாங்கள் நடத்தும் பத்திரிகை நிருபர்கள் சங்கம் சார்பில் மாநாடு நடத்த உள்ளோம், அதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகின்றனர் என்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல கோடி ரூபாய் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் இதுவரை யார் யாரிடம் மிரட்டி பணம் பறித்துள்ளனர். என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மோசடிக்கு பயன்படுத்திய 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, 1 லட்சம் பணம் மற்றும் போலி அடையாள அட்டைகள் மற்றும் இரண்டு சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய 5 பேரை போலீசார் சிசிடிவி பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 1 கோடி பணம் பறிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : owner ,gunpoint Gun , 'Selling fake, jewelery,million, jeweler owner
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...